நாட்டிலுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன!

0

நாட்டிலுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பேக்கரி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்த சுமார் 2 இலட்சம் பேர் வேலையினை இழந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக 50 சதவீதமான பேக்கரிகள் செயல்படாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முட்டை, வெண்ணெய், மரக்கறி, தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பேக்கரித் தொழிலுக்கு வழங்குபவர்களும் தங்களது வருமான ஆதாரங்களை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பேக்கரிகளின் உரிமையாளர்கள் வங்கிகளில் பெற்ற கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்படுவதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பேக்கரி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத் தருமாறு பிரதமருக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேக்கரி பொருட்களின் விற்பனையும் சரிவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் பணிஸ் ஒன்றின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கும் எனவும், அதனை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பெட்ரோல் நெருக்கடியால் 90 சதவீதமான பேக்கர உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பேக்கரி பொருட்களை விநியோகம் செய்யும் லொரிகள் 5 முதல் 6 நாட்கள் வரை பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதனால், தினசரி பேக்கரி பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.