நாட்டை முடக்காமல் கொரோனா பரவலினை கட்டுப்படுத்த நடவடிக்கை – GMOA

0

நாட்டை முழுமையாக முடக்கும் அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் ஏற்படாத விதத்தில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வயோதிபர்கள் மற்றும் தொற்றுநோய் ஆகியவற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

எமது நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு நூற்றுக்கு 0.2 வீதத்தில் காணப்படுகின்றது. ஆனால் உலக நாடுகளில் 2 அல்லது 3 என்ற ரீதியில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் நாட்டில் தொடர்ந்தும் கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக 9 வழிமுறைகளை அறிவித்துள்ளோம்.

இதிலே பிரதானமாக விநியோக நடவடிக்கைகள் ஊடாக தொற்று பரவுவதை தடுத்தல். மீன் விற்பனை மற்றும் ஆடை தொழிற்சாலை ஆகியவற்றில் ஏற்பட்ட தொற்றுபரவல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது.

இதற்கு குறித்த தொழிற்தளங்களில் முறையாக சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமையே காரணமாக அமைந்துள்ளது.

ஆகவே இதுபோன்ற விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது. இந்த நிலையில் 490 பொலிஸ் பிரிவுகளில் 200 மேற்பட்ட பிரிவுகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் நாட்டை முழுமையாக முடக்க வேண்டி ஏற்படும்.

ஆகவே அந்த நிலை ஏற்படாத விதத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பி செல்லவே நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.