சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சரவை உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மகா சங்கத்தினர் (30) ஓரணியில் திரண்டு தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர்.
அத்துடன், மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று, சர்வக்கட்சி அரசமைப்பதற்கு அரசியல் பிரமுகர்கள் முன்வராவிட்டால், அனைத்து அரசியல் வாதிகளையும் நிராகரிக்கும் வகையில், மகாநாயக்க தேரர்களின் அனுமதியுடன் கூட்டு சங்க ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் மகா சங்கத்தினர்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மகா சங்கத்தினரின் விசேட சங்க சம்மேளனம் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. பேராசிரியர் ஓமல்பே சோபித தேரர், பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் உட்பட பௌத்த பீடங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தேரர்கள் பங்கேற்றிருந்தனர்.
சங்க சம்மேளனத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வண. ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் வெளியிட்டார்.
“ நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தி, பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டு, அவற்றை செயற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு தேவையான வகையில் அரசமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்காக ,பிரதமர் உள்ளடங்கலான தற்போதைய அமைச்சரவை பதவி விலக வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் அனைத்து அரசியல் வாதிகளையும் நிராகரிக்கும் வகையில், மகாநாயக்க தேரர்களின் அனுமதியுடன் ஒன்றிணைந்த சங்க ஆணை பிறப்பிக்கப்படும்.” – என்று கலாநிதி வண. ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், மகாசங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு கட்சிகளின் இணக்கப்பாட்டை பெறும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.