மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் – ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கோரிக்கை!

0

மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் தவாடிப் பகுதியில் மூவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் உத்தியோகப்பூர்வ அறிக்கை இன்றைய தினம் வெளியாகும் என யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

தாவடியில் நேற்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 18 பேரில் மூவரே இவ்வாறு கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த 18 பேருக்கும் கொரோனா இல்லை என்பது மருத்துவ பரிசோதனையின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே ஊடகங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் அச்சத்தினை ஊட்டும் வகையில் செயற்படக் கூடாது எனவும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.