மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5 ஆயிரத்தி 546 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட 5546 பீ.சீ.ஆர். பரிசோதனைகளில் 317 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பரிசோதனை மாதிரிகள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவையென அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதவிர இப்போதனா வைத்தியசாலையில் விசேடமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்ட நோயாளர்களில் மார்ச் மாதம் 13 ஆந் திகதி தொடக்கம் 31 வரையான காலப்பகுதியில் 31 நோயளர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் மாதத்தில் 79 நோயாளர்களில் 2 பேருக்கும், மே மாதத்தில் 70 நோயாளர்களில் 23 பேருக்கும், ஜூன் மாதத்தில் 16 பேரில் ஒருவருமாக மொத்தம் 32 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 19 நோயாளர்களில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.