மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
குறிப்பாக தரம் 6 முதல் தரம் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகளே இன்று ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிலையில், மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும், மத்திய மாகாணத்திலுள்ள 15 பாடசாலைகள் இன்று திறக்கப்படவில்லை என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திலக் ஏகநாயக்க தெரிவிக்கின்றார்.
கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா தொற்று பரவக்கூடும் என அச்சப்படக்கூடிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளே இவ்வாறு திறக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
குறித்த பாடசாலைகளை சுகாதார பிரிவின் ஆலோசனைகளை பெற்று விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
கண்டி கல்வி வலயத்திலுள்ள 2 பாடசாலைகளும், கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திலுள்ள 7 பாடசாலைகளும், ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள 5 பாடசாலைகளும், மாத்தளை கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலையுமாக மொத்தம் 15 பாடசாலைகள் இன்று திறக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.