மரக்கறி கொண்டுசெல்லும் வாகனத்தில் போதைப் பொருள் கடத்தல்

0

கொழும்பு மற்றும் தம்புள்ள ஆகிய நகரங்களுக்கு காய்கறிகளுடன் போதைப்பொருட்களைக் கடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மரக்கறி விற்பனைக்காக பொலிஸ் அனுமதிப் பத்திரங்களை பெற்ற வாகனத்தின் சாரதி காய்கறிகளுடன் சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ்  மற்றும் ஹெராயின் போதைப் பொருட்களை கொண்டுசென்றமை, விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினரும் முந்தல் பொலிஸாரும் இணைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) சோதனையிட்டபோது கண்டுபிடிக்கப்பட்டது.

காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் சாரதியின் இருக்கைக்கையின் கீழ் ஒரு சிறிய பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 47 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மற்றும் 12 கிராம் ஹெரோயினும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட வாகனத்தின் சாரதி பாலாவி புழுதிவாயல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி-கடையாமோட்டைப் பகுதியில் இருந்து கொழும்பு மனிங் சந்தைக்கு காய்கறிகளைக் கொண்டுசென்றதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் உள்ள மனிங் சந்தை வளாகத்திற்கு அருகே மூன்று சந்தர்ப்பங்களில் கற்பிட்டி, அலங்குடாவில் வசிப்பவருக்குப் போதைப் பொருள் பொதிகள் வழங்கப்பட்டதாக சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது  தெரியவந்துள்ளது.

இதுகுறித்து முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.