அதிகரித்து வரும் மரக்கறி விலைகளை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும், நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் நிகழ்ச்சி திட்டம் ஒன்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மரக்கறிகளின் அதிகரித்த விலையினால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு பாதிப்பினை எற்படுத்துகின்றது. அதனை கட்டுப்படுத்த உடனடியாக தலையிட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மகாவலி அபிவிருத்தி அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவன அதிகாரிகளுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு மரக்கறி பயிரிடப்படும் பிரதேசங்களில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி கொண்டு செல்லப்படுகின்றது. அதன்பின்னர் தம்புள்ளையில் இருந்து குறித்த பிரதேசங்களுக்கு மரக்கறி விநியோகிக்கப்படுகின்றது.
இவ்வாறு விநியோகிக்கப்படும் மரக்கறிகள் போக்குவரத்தின்போது ஏற்படும் வீண் விரயத்தின் காரணமாக அறுவடை பெருமளவு வீணாகின்றது. இது ஒருபோதும் சரியான முறைமையாக இருக்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தோட்டக்கம்பனியில் உள்ள அரசகாணிகளில் தென்னை பயிர் செய்கை மாத்திரம் இருக்காது மரக்கறி பயிர் செய்கைக்கான வாய்ப்புக்களை கண்டறிவது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இச் சந்திப்பின் போது மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஸ, ராஜாங்க அமைச்சர் உஷான் ரணசிங்க மற்றும் அமைச்சுச் செயலாளர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.