மீன்பிடித் துறையுடன் தொடர்புடையோர் பெற்றுக்கொண்ட கடன்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மீன்பிடித் துறைமுக, நீண்டநாள் மீன்பிடி நடவடிக்கை மற்றும் மீன் ஏற்றுமதி துறை இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
துறைசார்ந்தோர் பெற்றுக்கொண்ட கடன்களை மீள செலுத்த குறைந்தது 03 மாத சலுகைக் காலத்தை வழங்குமாறு மத்திய வங்கியிடம் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, இறால், நண்டு உள்ளிட்ட கடல்வாழ் உயிரின கொள்வனவை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினூடாக முன்னெடுப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொரோனா தொற்றினால் கடந்த 21 ஆம் திகதி பேலியகொடை மீன் சந்தை மூடப்பட்டது.
இதனால் இதுவரை 750 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மீன் உற்பத்திகள், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இவை பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக மீன்பிடி துறைமுக, நீண்டநாள் மீன்பிடி நடவடிக்கை மற்றும் மீன் ஏற்றுமதி துறை இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.