கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளை மூன்று வார காலம் முடக்கி, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மாநகர எல்லைக்குள் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகின்ற நிலையிலேயே அவர் அரசாங்கத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மாநகர எல்லை பகுதியை மூன்று வார காலம் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் முடக்காத பட்சத்தில், இந்த வைரஸ் தொற்றானது, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ளவர்களை வெளியில் வர விடாத வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு – மட்டக்குளி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கொழும்பு மாநகர எல்லைக்குள் வாழும் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகம் என கூறிய அவர், கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர, குறைவடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்குள் வாழும் வயோதிபர்களை காப்பாற்றுவது கூட தற்போதைய சூழ்நிலையில் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக 14 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு மாநகர எல்லையை முடக்காத பட்சத்தில், இந்த தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது சிரமமானது எனவும் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இவரின் கோரிக்கை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவரையில் வெளியாகவில்லை.
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், கொழும்பினை முடக்கும் தீர்மானத்தினை அரசாங்கம் எடுக்காது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.