ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், புதிதாக ஒன்றும் குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த உண்மை கருத்துகளை வெளியிடாத ஜனாதிபதி ஆணைக்குழு, ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ எனப் பரிந்துரைகளைக் கொண்டு, அரசியல் கட்சி கொள்கை அளவில், வெறும் ஆவணத்தை மாத்திரமே முன்வைத்துள்ளது.
“ஒரு நாடு ஒரு சட்டம்’ என்பதை அமுல்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இரத்துச் செய்ய, ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைக்கிறதா என்ற கேள்வி எழுகின்றது.
நிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம், நாடு எதிர்கொள்ளும் விளைவு என்னவாகும்.
மேலும், சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர்இ ஏப்ரல் 09ஆம் திகதி, பாதுகாப்பு சபை கூடியபோது, தாக்குதல் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கிடைக்கப்பெற்ற எந்தவொரு தகவல் குறித்தும் கலந்தாலோசிக்கப்படவில்லை.
இராணுவ பிரதானி, குற்ற விசாரணை திணைக்கள உயரதிகாரிகள் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சகலரும் அக்கூட்டத்தில் வெளியிடாத விடங்களை, அதன் பின்னர் கலந்துரையாடினரா என்பதைக் கூற முடியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், புதிதாக ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. மேலைத்தேய சட்டத்தை நீக்க, ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைக்கிறது.
பாதுகாப்புச் சபை கூடியபோது, தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தால், முஸ்லிம் எம்.பிக்களை அழைத்து ஏதேனும் தாக்குதல் சம்பவம் நடத்தப்படுமாயின், அதற்கான முழு பொறுப்பையும் அவர்கள் ஏற்கவேண்டும் எனக் கூறியிருக்க முடியும்.“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.