மேல் மாகாணத்தில் சில இடங்களில் ஊரடங்கு நீக்கம் – இன்னும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

0

மேல் மாகாணத்தில் இன்று அதிகாலை 05 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

எனினும் சில பொலிஸ் பிரிவுகள், மீள்அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே காணப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் ,

மட்டக்குளி, முகத்துவாரம்,
புளூமென்டல், கொட்டாஞ்சேனை,
கிராண்ட்பாஸ், கரையோர பொலிஸ் பிரிவு, ஆட்டுப்பட்டித்தெரு, மாளிகாவத்தை,
தெமட்டகொட, வெல்லம்பிட்டிய,
வாழைத்தோட்டம், பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில்,

வத்தளை, பேலியகொட,
கடவத்தை, ராகம,
நீர்கொழும்பு, பமுணுகம,
ஜா-எல, சப்புகஸ்கந்த ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில்,

ஹொரணை, இங்கிரிய பொலிஸ் பிரிவு மற்றும் வேகட மேற்கு கிராம சேவையாளர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, ருவன்வெல்ல ஆகிய இரண்டு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குருநாகல் நகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் அங்கிருந்து வௌியேறவோ வௌியிடங்களை சேர்ந்தவர்கள் இந்த பொலிஸ் பிரிவுகளுக்குள் பிரவேசிக்கவோ சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளூடாக வாகனங்களை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும் கூட அங்கு வாகனங்களை நிறுத்த முடியாதென அவர் குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விநியோக நிலையங்கள், பல்பொருள் வர்த்தக நிலையங்கள் மருந்தககங்கள், வீடுகளுக்கே சென்று பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதேபோன்று, இந்த பகுதிகளில் வாழ்வோர் தத்தமது வீடுகளிலேயே இருக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், ஏதேனும் சுகாதார தேவை மற்றும் அத்தியாவசிய தேவை அல்லது கொவிட் – 19 தொற்று அல்லாத வேறு நோய்களுக்காக மருந்தை பெற வேண்டிய அவசியம் காணப்படின் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்வதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் இருதய நோயாளர்களுக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு மத்தி பகுதிகளில் 05 குடியிருப்பு தொகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மெத்சந்த செவண, மிஹிஜய செவண, முகத்துவாரம் ரன்மிண செவண, மெட்டகொட சிரிசந்த உயன தெமட்டகொட, மாளிகாவத்தை NHS குடியிருப்பு தொகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த குடியிருப்பு தொகுதிகளை அண்மித்த பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனால், அங்கு வசிக்கும் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வௌியில் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், அவசர சுகாதார தேவை மற்றும் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மாத்திரம் சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்கான அனுமதி குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்திச் செல்ல முடியாதெனவும் பிரதான வீதிகள் அண்மித்து காணப்படும் பட்சத்தில் அந்த பகுதிகளை ஊடறுத்து பயணிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சமூக இடைவௌியை பேணாத மற்றும் முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்யும் நோக்கில் இன்று முதல் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.