யுத்தம் முடிவடைந்த பிற்பாடு கையளிக்கப்பட்டவர்களும், சரணடைந்தவர்களும் எப்படி யுத்தத்தில் கொல்லப்படுவார்கள் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.
கிளிநொச்சியில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தீச்சட்டி போராட்டத்தின் பின் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தினை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஊடகங்களிற்கு வழங்கியிருந்தனர்.
குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. அதில் மேலும்,
வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களாகிய நாம் சர்வதேசத்திடம் நீதி கேட்டுப் போராடத் தொடங்கிய போராட்டம் இன்று ஐந்தாவது வருடத்தை எட்டுகின்றது.
1462 நாட்காளாக தொடர்ந்து போராடும் நாங்கள் எங்களுடன் சேர்ந்து போராடத்தொடங்கிய 83 தாய் தந்தையினரின் இறப்பையும் தாங்கியவண்ணம் தொடர்கின்றது. இப்போராட்டமானது எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அல்லது எமது இறப்பு வரை தொடரும்.
இலங்கை அரசின் கபடத்தனத்தைப் புரிந்துகொள்ளாத சர்வதேசம் எமது எதிர்ப்பையும் மீறி பொறுப்புக்கூறலுக்கான கால அவகாசங்களை நீடித்து இலங்கை அரசிற்குத் துணைபோனது.
இலங்கையானது பொறுப்புக்கூறலுக்கான இணை அனுசரணையிலிருந்து தன்னிச்சையாக விலகியதுடன் “நாம் உள்ளகப் பொறிமுறையை மேற்கொள்வோம், உள்நாட்டுப் பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம்” என்று அறிவித்தவுடன் தான் சர்வதேசம் இலங்கையின் கபடத்தனத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றது.
எமதருமை உறவுகளான இளம்பிஞ்சுப் பாலகர்களும், மகன்களும், மகள்களும், கணவன்மார்களும், மதகுருக்களும், இளைஞர் யுவதிகளும் இறுதி யுத்தத்தின் முன்னரும் பின்னரும் அரச படைகளினாலும், வெள்ளை வான்களினாலும் பாதுகாப்பு அரண் பகுதிகளிலும், கடலிலும், வீடுகளிற்கு நேரடியாக வந்தும் கைது செய்து கொண்டுபோனது மட்டுமல்லாது யுத்த இறுதி நாட்களில் விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களையும், சரணடைந்தவர்களையும் இது நாள் வரை காணாது அவர்கள் நிலைகளை அறியாது வீதிகளில் அலைத்தழிக்கப்பட்டோம்.
29 இற்கு மேற்பட்ட, பெற்றோருடன் சரணடைந்த, கைக்குழந்தைகள் மற்றும் சிறார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களையும், இவர்களின் பெற்றோரையும் மற்றும் உறவுகளையும் தேடிப் போராடிவரும் நாங்கள் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறோம்.
இந்தச் சிறுவர்கள் செய்த குற்றம்தான் என்ன? தமிழனாகப் பிறந்ததா? இந்தப் பிள்ளைகளில் அக்கறை காட்ட எவரும் இல்லையா? சிறுவர்களின் நலனைப் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட Save the children, Children fund, UNICEF என்பவற்றிற்கும் இவை தெரியாதா? இதுவரை இந்தச் சிறுவர்கள் பற்றி எவராவது அக்கறை கொண்டார்களா? உலகிலே மனிதம் மரணித்து விட்டதா?
யுத்தம் முடிவடைந்த பின் கையிலே ஒப்படைக்கப்பட்டவர்கள் போரிலே கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவரும் இல்லை, அனைவரும் போரில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
யுத்தம் முடிவடைந்த பிற்பாடு கையளிக்கப்பட்டவர்களும், சரணடைந்தவர்களும் எப்படி யுத்தத்தில் கொல்லப்படுவார்கள்? உயிர் வாழும் சாட்சியங்களாக நாம் இருக்கும் போது, இலங்கை அரசானது தொடர்ச்சியாக பொய் உரைப்பதின் காரணம் என்ன? தொடர்ச்சியாக எமது உறவுகளை எம்மிடமிருந்து பிரித்து வைப்பதற்காகவா?
ஐ.நா.மனித உரிமை ஆணையாளரால் பாராட்டப்பட்ட OMP சாதித்தது என்ன? கலந்தாலோசனைச் செயலணியின் பரிந்துரைகள் எவற்றையுமே உள்வாங்காமல் தன்னிச்சையாக ஸ்தாபிக்கப்பட்ட OMP யிற்கு செயல்திறன் அறவே இல்லை.
எமது எட்டு மாவட்டத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழு 17.10.2019 அன்று OMP ஆணையாளரிடம் வலுவான சாட்சிகள், ஆதாரங்கள் உள்ள ஐந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களைக் கையளித்திருந்தது. அதில் ஒன்றுக்காவது மூன்று மாதத்திற்குள் தீர்வைக் கண்டு தந்தால் நாம் OMP ஐ ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தோம்.
21 மாதங்கள் கடந்தும் கூட அவர்களால் ஒப்புக்கொண்டபடி நிருபிக்க முடியவில்லை என்றால் OMP ஐ செயல்திறன் அற்றது என நிராகரிப்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.? OMP சிங்கள அரசின் ஒரு கண்துடைப்பு ஆணைக்குழுவாகவே இயங்குகின்றது.
ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி உட்பட பெரும்பான்மையாக சிங்கள ஆணையாளர்களை கொண்ட OMP ஒருபோதும் எமது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பதை நிரூபித்துள்ளது. அத்துடன் எமது பிரச்சினைக்கான தீர்வு உள்ளூர் பொறிமுறைகளில் இல்லை என்பதையும் தொடர்ச்சியாக நிறுவி வருகின்றது.
ஐ.நா ஆணையாளர் தனது அறிக்கையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) பாரப்படுத்துவது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் வரவேற்பதுடன், இணைத்தலைமை நாடுகளான பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, மொண்டினிகிக்றோ, வட மாசடோனிய ஆகிய நாடுகளிடம், நீங்கள் சமர்ப்பிக்கும் வரைவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றதிற்கான (ICC) பரிந்துரையை உட்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பாக வேண்டி நிற்கின்றோம்.
கடந்த பெப்ரவரி 3ம் திகதி தொடங்கி 7ம் திகதி முடிவுற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் இலங்கைவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்துவதை வலியுறுத்தியவர்களே.
எனவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தி எமக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசமும் ஐ.நாவும் விரைந்து செயற்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள். எமது உறவுகளைத் தேடும் போராட்டம் கூட அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கின்றோம்.
கோவிட் – 19ஐ காரணம் காட்டி எம்மை ஒன்றுகூட விடாது தடுக்கின்றனர். மீறினால் தனிமைப்படுத்தல் என்று அச்சுறுத்துகின்றனர். நினைவுகூரல், தன்னெழுச்சிப் போராட்டங்களுக்குக் கலந்து கொள்ள தடைவிதித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று வழங்குகின்றனர்.
அதற்கு மேலாக காரணம் எதுவுமின்றி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு பணிக்கின்றர்கள். இதனாலே எமக்கு மன உளைச்சல் அதிகரிக்கின்றது. இதற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்தப் போராட்டத்தைப் பயங்காட்டி நிறுத்த வேண்டும் என்ற நோக்கமே.
தொடர்ச்சியாக இராணுவமயப்படும் தற்போதைய இலங்கை ஆட்சி அதிகாரம், சிவில் நிர்வாகங்களை இனவழிப்பிலும், போர்குற்றங்களிலும் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கொண்டு நிரப்பி வருகின்றது.
இதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை விடுப்பத்துடன் ஜனநாயக வெளிகளை ஒடுக்கி வருகின்றது.
உதாரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் கடற்படை அட்மிரல் பொது ஊடகங்களில் தமிழர் விரோத இனவாதத்தை கக்குவதுடன், ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடும் தமிழர்களை மட்டும் நோக்கி நேரடியாகவே அச்சுறுத்தல் விடுகின்றார்.
ஆகவே இவரால் வழிநடத்தப்படும் இலங்கை பொலிஸாரும், மற்றய அரச படைகளும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை சர்வதேசம் உன்னிப்பாக கரிசனை செலுத்த வேண்டும்.
எனவே நாம் சர்வதேச சமூகத்திடமும் ஐ.நாவிடமும் கோருவதாவது: எமது உறவுகளுக்கான நீதி விரைவாகக் கிடைக்க வேண்டும். அதற்கு ஏதுவாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும். உறவுகளைத் தேடும் எமக்கு அரச புலனாய்வினரால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட்டு எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.