வடக்கில் தொடர்ந்து வரும் சீனாவின் மேலாதிக்கம் : இரா.துரைரெட்ணம்

0

சீனா வடக்கு, கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முன்னெடுக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என பாத்மநாபா மன்றத்தின் தலைவரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழர்கள் இந்தியா மீது நம்பிக்கையினை குழப்புவதற்காகவே சீனாவின் இந்த செயற்பாடு அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

குறிப்பிட்ட காலமாக யாழ்.குடா நாட்டிலும், வடக்கு, கிழக்கிலும் முன்னெடுக்கப்படும் இராஜதந்திர செயற்பாடுகளின் அடிப்படையில் வடக்கினை சீனாவுக்குத் தாரை வார்த்துவிட்டதுபோன்று உள்ளது. வடக்கில் சீனாவின் மேலாதிக்கம் தொடர்ந்து வருகின்றது.

இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியாக வலுவடைவதற்காக யாழ் குடாவில் உள்ள இந்தியாவுக்கு ஆபத்தாகவரக்கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்கின்ற சந்தேகம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன.

கடந்த வாரம் கூட சீனாவின் தூதுவர்கள் யாழ் குடாவில் இந்தியாவின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய கேந்திர நிலையத்திற்குச் சென்ற விடயம் என்பது இலங்கை ஊடாக இந்தியாவுக்குச் செய்தி ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கை அரசாங்கம் அயல்நாடுகளுக்கு அச்சுறுத்தலையும் பாதுகாப்பு நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடிய இராஜதந்திர செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு இறையான்மையுள்ளது. வடக்கு, கிழக்கு பூர்வீகமாகத் தமிழர்கள் வாழும் பிரதேசம். தனியான கலை, கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பகுதி.

இந்த கலை, கலாச்சார விழுமியங்களுடன் இந்தியா அங்குள்ள தமிழ் நாட்டுடன் உள்ள உறவு, தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக்கூடிய செயற்பாடுகள் எனப் பல விடயங்களில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் இந்தியா மீது கடந்த காலத்தில் கரிசனை காட்டியுள்ளார்கள். எதிர்காலத்தில் காட்டுவார்கள், காட்டக்கூடிய சூழ்நிலையுள்ளது.

இந்த சூழ்நிலையினை குழப்புவதற்காகச் சீனாவின் ஆதிக்கத்தைக் கொண்ட செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும். அதுவே ஆரோக்கியமான செயற்பாடு.

இலங்கை அரசாங்கம் தனது பொருளாதார நலனுக்காக வடக்கு, கிழக்கினை சீனாவுக்குத் தாரைவார்த்துக்கொடுப்பது என்பதும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடியவாறும் அயல்நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடியவாறும் இலங்கை அரசாங்கம் செயற்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

கடந்த சில வாரங்களாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை தொடர்பில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

1987 காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபை உருவாக்கப்பட்டது முஸ்லிம்களுக்குச் செய்த சதியென்று கூறுவது என்பது ஒரு நகைப்புக்குரிய விடயமாகும்.

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இணைந்து செயற்படும்போது பெரும்பான்மையினத்தவர்கள் மூலமாக நெருக்குவாரங்கள் குறைவாகயிருக்கும்.

வடக்கு, கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பலம் என்பது வடக்கு, கிழக்கு இணைந்திருப்பதாகும்.வடக்கு, கிழக்கு இணைந்திருப்பதன் மூலமே தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தமுடியும்.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவது வடக்கு, கிழக்கு இணைப்பு என்பதை சில முஸ்லிம் பிரதிநிதிகள் மறந்துவிடக்கூடாது.

2006ஆம் ஆண்டு வடகிழக்கு நீதிமன்றம் ஊடாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களைப் பலவீனப்படுத்தும் வகையிலான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஒற்றுமையாக இணைந்து செயற்படுவதன் மூலமே இனவாத அரசியல் செயற்பாடுகளைத் தடுக்கமுடியும் என்பதை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறந்துவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.