வட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும் மேற்படி சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்க தருமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அராலி மேற்கைச் பகுதியைச் சேர்ந்த முத்துராசா கண்ணதாசன் (வயது-23) என்ற குடும்பத்தலைவரின் வீட்டில் 19 ஆம் திகதி இரவு 8 மணியளவில் அயல்வீட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கதைத்துக்கொண்டிருந்துள்ளனர்.
அந்தக் குடும்பத்தலைவரின் வீட்டு வீதியால் சிவில் உடையில் பயணித்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் அறுவர் திடீரென்று அவரது வீட்டுக்குள் நுழைந்து, ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் அயல் வீட்டுக்காரரை எதற்காக வைத்துள்ளாய் வாக்குவாதப்பட்டனர்.
அத்துடன் அங்கிருந்த இளைஞர்களுக்குக் கொட்டன் தடியால் பலமாகத் தாக்கித் துரத்திய பின் குடும்பத்தலைவரின் ஆளடையாள அட்டையைக் கேட்டனர். இதையடுத்து, அவரது மனைவி ஆடையாள அட்டை எடுப்பதற்காக உள்ளே சென்ற சமயம், பொலிஸாருக்கும் குடும்பத்தலைவருக்கும் வாக்குவாதம் முற்றி பொலிஸார் குடும்பத்தலைவரை கொட்டன் தடியால் சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகின்றது.
பொலிஸாரின் பலமான தாக்குதலால் குடும்பத்தலைவரின் வாய் மற்றும் ஏனைய உடற்பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மயங்கிய நிலையில், அவரை மோட்டார் சைக்கிளில் தூக்கி ஏற்றி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்வதற்குப் பொலிஸார் முயன்ற வேளை, அவரது மனைவி கூக்குரலிட்டார்.
அவரது சத்தத்தைக் கேட்டுச் சம்பவ இடத்துக்குச் சென்ற அக்கம் பக்கத்தினரை பொலிஸார் துரத்தித் சென்று கடுமையாகத் தாக்கியது மட்டுமால்லாமல் தமது ஆடைகளைக் கூட பொலிஸார் கிழித்துத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் அடாவடிகளைப் பொறுக்கமாட்டாது ஆத்திரமுற்ற அப்பகுதி இளைஞர்கள் பொலிஸார் மீது கற்களால் எறிந்தமையை பொலிஸார் காணொளி எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர்களை பொலிஸார் மிரட்டியதுடன், இவ்வாறு அராஜகத்தில் ஈடுபட்ட பொலிஸார் மதுபோதையில் நின்றதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர். என் கணவர் கடற்றொழில் செய்பவர். பொலிஸார் வருவதற்குச் சற்று முன்தான் தொழிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்தார். அவரைச் சாகுமளவுக்குப் பொலிஸார் கொட்டன் தடிகளால் அடித்ததாகவும் அவரது மனைவி கூறியுள்ளார்.