வட – கிழக்கில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர் அவர்களுக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலங்களில் பாடசாலை கிரிக்கெட் தொடர்பில் நாம் பல செயற்பாடுகளை மேற்கொண்டோம்.
அதற்கமைய மத்திய மாகாணத்தில் 50 பாடசாலைகளுக்கு 4 மைதானம், மேல் மாகாணத்தில் 169 பாடசாலைகளுக்கு 10 மைதானம், வட மாகாணத்தில் 26 பாடசாலைகளுக்கு 1 மைதானம், சப்ரகமுவ மாகாணத்தில் மைதானமேயில்லை, வடமேல் மாகாணத்தில் 41 பாடசாலைகளுக்கு 3 மைதானம், தென் மாகாணத்தில் 50 பாடசாலை 2 மைதானம் இவ்வாறாகவே பாடசாலை கிரிக்கெட் நிலை காணப்படுகிறது.
முதலாம் தர 09 குழுக்களுக்கு சிறந்த மைதானம் இல்லையென தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல இவர்களில் இரண்டு குழுவினருக்கு மட்டுமே சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் (SSC, Oval) விளையாடும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
ஆகவே இவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் மைதான அனுபவம் இல்லாமை முக்கியமானதாகும்.
கெத்ராம, சூரிய வெவ, பல்லேகெல போன்ற மைதானங்களில் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. ஆகவே எமது கிரிக்கெட்டில் பல சிக்கல்கள் உள்ளது.
மேலும் கடந்த 15-20 வருடங்களாக எமது பாடசாலை கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவது குறித்து அக்கரை செலுத்தவில்லை. ஆயினும் கடந்த காலங்களில் பாடசாலை மட்டத்திலே சிறந்த வீரர்கள் தோன்றியுள்ளனர்.
அதிலும் பிற மாகாணங்களிலே அனேகமான வீரர்கள் உருவானார்கள். கொழும்பில் அல்ல. யுத்தத்தின் பின்னர் வட – கிழக்கு பிரதேசங்களில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.
ஆயினும் அவர்களுக்கு நம் எவ்வித வசதிகளையும் வழங்கவில்லை. ஆகவே இவை எமக்கு முக்கியம்.
40 பில்லியன் டொலர் கடன் பெற்றால் நூற்றுக்கு 3 அல்லது 4 வீத வட்டி அடிப்படையில் 3.5 மில்லியன் ரூபா, 10 அல்லது 15 வருடங்கள் செலுத்த வேண்டும். ஆகவே இதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கிரிக்கெட் குழு என்பது ஒரு தர அடையாளம் (Brand) இப்போது அந்த தர அடையாளம் (Brand) இல்லை.அவ்வாறு இடம்பெறும் போது தொலைக்காட்சி உரிமம் (TV Rights) ஊடாக கிடைக்கும் நிதி குறையும்.
அத்துடன் கோவிட் – 19 பின் சர்வதேச அனுசரணையாளர்கள் வரும் வீதம் குறையும். ஆகவே இக்காலகட்டத்தில் எமது வீரர்களை உருவாக்குவதே சிறந்தது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.