கொரோனா வைரஸ் பரவலை துரிதமாகக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதிக்கும் விசேட வைத்திய நிபுணர்களுக்கும் இடையே நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், நிபுணர்களின் கருத்துக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டறிந்து கொண்டார்.
கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக அரசாங்கம், பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை என்பவற்றினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதுவரையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள், அவர்களுடன் பழகிய குழுவினர் அவர்களுடன் பழகிய இரண்டாவது குழுவினர் உள்ளிட்டோர் இனங்காணப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது மிக முக்கியமானது என்று விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
இதன்போது வைரஸ் தொற்றினை இனங்காண்பதற்குரிய பரிசோதனைக் கருவிகள் போதியளவு இருக்கின்ற போதிலும் அனைத்து சந்தர்ப்பத்திலும் எவ்வித நிலைவரத்துக்கும் முகங்கொடுக்கும் வகையில் தேவையானவற்றை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஏனைய நாடுகளுக்கு அப்பால் வைரஸ் பரலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்த தனிமைப்படுத்தல் வேலைத்திட்டங்களுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
அந்த தனிமைப்படுத்தல் செயற்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதானது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய காரணியாகும் என்றும் இதன்போது வைத்திய நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.
இது வரையில் வைரஸ் பரவல் இனங்காணப்படாத பிரதேசங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவமும் இதன்போது வைத்திய நிபுணர்களால் கூடுதல் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டது.
அந்த பிரதேசங்களுக்கு வைரஸ் பரவல் இனங்காணப்பட்ட பகுதிகளிலிருந்து பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்பது வைத்திய நிபுணர்களின் நிலைப்பாடாகக் காணப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் வீட்டில் இருப்பதே மிக முக்கியமானதாகும் என்பதையும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தினர். அத்தோடு வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் என்வற்றின் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துக்காட்டப்பட்டது.