விடுதலைப் புலிகளின் தலைவரை கொன்றதாக ஜனாதிபதி சொன்னதே பெரிய சாட்சியம்! – அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தல்

0

பிரபாகரனை தான் கொன்றதாக ஜனாதிபதி கோட்டாபய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதனை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டோருக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இன்று காலை இடம்பெற்றிருந்தது.

இதன்போதே குறித்த விடயத்தை சிறீதரன் எம்.பி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கூறுகையில்,

ஜெனீவாவில் கொண்டுவரப்பட இருக்கின்ற தீர்மானம் தொடர்பில் மற்றும் அந்த தீர்மானத்திற்கு இருக்கின்ற சவால்கள், அந்த சாவல்களை எதிர்கொள்வதற்காக ஒருங்கிணைந்த நாடுகள் எவ்வாறான விடயங்களை எதிர்கொள்கின்றன, அந்த சாவால்களை அவர்கள் எவ்வாறு சாமாளிக்க போகிறார்கள், அதற்கு தமிழர் தரப்பான எங்களுடைய பங்களிப்பு என்ன மற்றும் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் என்பன தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

மேலும் இன்று உள்ள களசூழல்கள், தமிழ் மக்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் இந்த அரசாங்கம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நடந்து முடிந்த பின்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் போன்றோரை விசாரணை என்ற போர்வையில் அச்சுறுத்தி வருவதையும் நாங்கள் அவருடன் கலந்துரையாடியுள்ளோம்.

அத்துடன் அண்மையில் அம்பாறையில், உகுண பிரதேசத்தில் வைத்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நான் கொன்றேன் என்று ஜனாதிபதி கோட்டபாய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம்.

அதை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என அலைனா டெப்லிட்ஸிடம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அண்மையில் உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதி மையம், நியூயோர்க் பல்கலைக்கழகம், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம், கனேடிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலில் கலந்து கொண்டு போர்க்குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப், இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த சந்தரப்பத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான விடயங்களை சாட்சியமாக வைத்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் இதன்போது வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.