கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு வருகைதரும பயணிகளின் பொதிகளைப் பரிசோதிப்பதற்கான பாதுகாப்புக் கண்காணிப்புப் பொறிமுறையில் மேலும் நவீன தொழில்நுட்ப வசதி உட்புகுத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் பொதிகளைப் பரிசோதிப்பதற்காகப் பயணிகள் காத்திருக்க வேண்டிய நேரத்தின் அளவு குறைவடையும் என்றும் இலங்கை விமானசேவைகள் அதிகாரசபை அறிவித்திருக்கிறது.
இந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய பொதிகளைப் பரிசோதிக்கும் கட்டமைப்பு இன்று திங்கட்கிழமையிலிருந்து விமானநிலையத்தில் பாவனைக்கு வந்திருப்பதாகவும், இந்த நவீன கருவி சுமார் 61 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியைக் கொண்டது என்றும் அதிகாரசபை தெரிவித்திருக்கிறது.
இதுவரை காலமும் விமானநிலையத்தில் பயணிகளின் பொதிகளை சோதனை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுவந்த கருவி சுமார் 19 வருடகாலமாகப் பாவனையில் இருப்பதோடு, இவ்வருட முடிவில் அதனை மாற்றவேண்டிய தேவை காணப்பட்ட நிலையிலேயே நவீன தொழில்நுட்ப வசதிகளுடனான புதிய கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.
இதனூடாகப் பொதிகளைப் பரிசோதனை செய்யும் வரையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நேரம் குறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.