அநுர அரசு மாகாண சபைத் தேர்தலுக்கு அஞ்சுகின்றது
மாகாண சபைத் தேர்தலைச் சந்திப்பதற்கு அநுர அரசு பயப்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தலைச் சந்திப்பதற்கு அநுர அரசு பயப்படுகின்றது. அதனால் தான் இந்தத் தேர்தலை அநுர அரசு இழுத்தடிக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் .
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் .
அவர் மேலும் கூறுகையில், “கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இருக்கின்றது.
ஆனால், இந்த அரசு தேர்தலைச் சந்திப்பதற்குப் பயந்து கொண்டு இதனை இழுத்தடிப்பதாக எமக்குத் தோன்றுகின்றது. இந்த அரசுக்கு ஏதோவொரு வகையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றத்தில் கிடைத்து விட்டது.
எங்களது கட்சியும் கூட இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எழுச்சி கண்ட நிலையில் காணப்படுகின்றது. எனவே தான் மாகாண சபைத் தேர்தலை நடத்தி விட்டு அதில் தோல்வியடைந்து விட்டால் என்ன செய்வது என்று அநுர அரச தரப்பினர் வெட்கப்படுகின்றனர்.
அதனால்தான் என்னவோ அந்தத் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர். தேர்தலுக்குப் பயந்து தேர்தலில் மக்களுக்கு முகம் கொடுப்பதற்கு பின்வாங்கிக் கொண்டு தேர்தலைப் பிற்போடுவது ஒரு முறையற்ற செயற்பாடாகும் எனத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்