லொறியை திருடிச் சென்ற நபரால் நேர்ந்த விபரீதம்
கம்பஹா - கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இரண்டு விபத்து
கம்பஹா – கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இரண்டு விபத்து சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 15ஆம் திகதி கந்தானை, மரியா மாவத்தையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் லொறி ஒன்று திருடப்பட்டது.
இதனை அடுத்து லொறியின் உரிமையாளரும் மற்றும் அவரது ஊழியர்களும் சேர்ந்து திருடிச் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்தனர். இந்நிலையில் சந்தேகநபர் லொறியை நிறுத்தாமல் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளார்.
இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர்.
அதனை தொடர்ந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளை மோதியதில் இருவர் காயமடைந்தனர். அதன் பின்னர் லொறி சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
இதன்போது கம்பஹாவைச் சேர்ந்த 43 வயதுடைய நபர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். காயமடைந்த மற்றைய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் சந்தேகநபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் எனவும் ஜா-எலவைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.