பெருந்தொகை கைப்பேசிகளை சட்டவிரோதமாக கடத்திய நபர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3 கோடி 40 இலட்சம் ரூபாய் (ரூ. 34,000,000) பெறுமதியான மிக நவீனரகமான கையடக்கத் தொலைபேசிகள் 397 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர் நேற்று காலை 07.00 மணிக்கு டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-226 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) அனுமதியின்றியும், சுங்க அதிகாரிகளுக்கு அறிவிக்காமலும், 3 பொதிகளில் மறைத்து “பச்சை வழி” (Green Channel) ஊடாக இந்தத் தொலைபேசிக் கையிருப்பைக் கொண்டு வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.