வடகிழக்கில் இனவாதம்! இரா.சாணக்கியன் கருத்து

எங்களிடம் இனவாதமில்லையென்று ஜனாதிபதி கூறுகின்ற போதிலும் அதற்கு மாறான

Published January 19, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 17 min read

எங்களிடம் இனவாதமில்லையென்று ஜனாதிபதி கூறுகின்ற போதிலும் அதற்கு மாறான செயற்பாடுகளே வடகிழக்கில் நடைபெறுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

கல்வி சீர்திருத்தம் முக்கியமாக கருதப்படுகின்றபோதிலும் சமூகக்கல்வி பாட புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலே ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில் மறைந்த எமது தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் அடுத்த பொங்கலுக்கிடையில் தீர்வு கிடைக்கும், அடுத்த தீபாவளிக்கிடையில் தீர்வு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லக்கூடிய விதத்திலே தமிழர்களின் அரசியல் நிலவரம் இருந்தது. பலர் அது தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்தார்கள், பகிடியாக பேசினார்கள்.

இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய விடயம் என்னவெனில் எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் நிரந்தரமான கௌரவமானதொரு அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அந்தக் காலத்தில் அரசியலில் ஈடுபட்டார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு பாராளுமன்றம் ஒரு அரசியற்பேரவையாக மாற்றப்பட்டு அரசியல் அமைப்பினுடைய ஒரு வரைவு வேலை ஆரம்பிக்கப்பட்டு இடைக்கால வரைவொன்று உருவாகி அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இப்படியாக பல முன்னேற்றங்கள் நடந்தன.

அரசியல்கைதிகள் விடுவிக்கப்பட்டனர், எமது காணிகள் விடுவிக்கப்பட்டன, காணாமல் ஆக்கப்பட்டோர் பொறுப்புக் கூறல் விடயத்தில் நாங்கள் முழுமையாக இணங்காவிட்டாலும் அரசாங்கம் ஏதாவது செயற்பாடுகளை முன்னெடுத்தது. அந்த அடிப்படையில் 2016,2017,2018 ஆம் ஆண்டுகளில் சம்பந்தன் ஐயா தீபாவளிக்கு தீர்வு வரும், பொங்கலுக்குத் தீர்வு வரும் எனக்கூறியது தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரக்கூடிய வகையில் செயற்பாடுகள் இருந்தது.

ஆனால் துரதிஷ்டவசமாக இன்று 2026ஆம் ஆண்டு தைபிறக்கும்பொழுது தமிழ் மக்களுடைய நிரந்தரமான அரசியல் தீர்வைப்பற்றி நம்பிக்கையுடன் இருக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் இல்லை என்பதை மனவருத்தத்துடன் கூறவேண்டியுள்ளது. இன்னும் ஆறேழு மாதங்களில் ஜனாதிபதி அவர்கள் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிவிடும். அதற்கிடையில் அரசியற்கைதிகள் எவரும் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஜனாதிபதியுடனான உரையாடல்களிலிருந்தும் பாதுகாப்புத் தரப்பினருடனான உரையாடல்களிலிருந்தும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

காணிவிடுவிப்பு தொடர்பில் நாங்கள் பேசியபோதும் எந்த இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. இன்றுவரை சில பாதைகள் மாத்திரம் திறக்கப்பட்டு அவற்றைக்கூட 7.00மணிக்குப்பிறகு பயன்படுத்த முடியாத நிலை மயிலிட்டி போன்ற பிரதேசங்களில் உள்ளது.

அதேபோல்; மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டங்களில் கூட என்னால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் முப்பத்துநான்கு விடயங்களில் வனஇலாகாவுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள், மகாவலி, தொல்பொருள் தொடர்பான விடயங்கள் ஒன்றரை வருடங்களாக கூட்டங்கள் நடைபெற்றும் எந்த முன்னேற்றங்களுமில்லை. காணொளிகளை பார்த்தால் தெரியும் மகாவலி தொடர்பில் போன கூட்டத்தில் இணக்கப்பாடு இருக்கின்றது என்கின்றார்கள், இந்தக்கூட்டத்திலே புதிய அதிகாரிகள் வந்து இணக்கப்பாடு இல்லை என்கின்றார்கள்.

பெரும்பான்மை சமூகத்தினரால் எமது மேய்ச்சற்தரைகள் அபகரிக்கப்பட்டு சட்டவிரோதமாக அவர்கள் குடியேறியபோது அவர்களுக்கு நிரந்தரமாக அந்தக் காணிகளை கொடுக்கவேண்டுமென கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில்கூட தீர்மானங்களை எடுக்கவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்த பிறகு வனஇலாகாவினால் அத்துமீறி கெவிலியாமடுவில் எமது மேய்ச்சற்தரைகளில் குடியேறியிருக்கின்ற பெரும்பான்மை சகோதரர்களுக்கு அந்தக் காணிகளை விடுவிக்குமாறு தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

தொல்பொருள் சம்பந்தமாக நாங்கள் ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டோம். அமைச்சர் விதுர விக்கிரமநாஙக்க அவர்கள் குசனார்மலைக்கு வந்தபோது அவரது வழியை மறித்து நடையிலே திருப்பியனுப்பினோம். ஆனால் இநத அரசாங்கம் வந்தபிறகு தமிழ் அதிகாரிகளை நியமத்து அவர்களை வைத்து எங்களின் அறுநூறுக்கும் அதிகமான பகுதிகளை தங்களின் கைவசம் எடுப்பதற்காக எங்களுடைய தவிசாளர்களையும் பொதுமக்களையும் நீதிமன்றத்தின்முன் நிறுத்துகின்றார்கள்.

இப்படியான நிலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டுவந்து அதன்மூலம் எமது கருத்துச் சுதந்திரம் என்ன நிலைக்கு செல்லப்போகின்றது என்பது தெரியவில்லை. நல்லாட்சி ஆட்சிக்காலத்திலாவது சம்பந்தன் ஐயா அவர்களால் பொங்கலுக்குள் தீர்வு வருமென்று சொல்லக்கூடிய நிலையிருந்தது.

ஆனால் இந்த அரசாங்கத்திலே தமிழ் மக்களைப் பொருத்தவரையிலே சில கருத்துகளை நாங்கள் வரவேற்க வேண்டும். அண்மையில் ஜனாதிபதி அவர்கள் அனுராதபுரத்தில் இருக்கும் ஸ்ரீ மகாபோதியைத் தாண்டி பூரணை தினத்தில் தையிட்டிக்கு வந்து வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என்ற கருத்தை யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியிருக்கின்றார். அக்கருத்தை நாங்கள் வரவேற்கின்றோம். விகாராதிபதிகளைப்பார்த்து பயப்படாமல் அவர் அந்தக் கருத்தை கூறியிருக்கின்றார்.

அவர் அந்த மேடையில் நின்று எல்லோருக்கும் சமனான வாழ்வு,சமனாக எல்லோரையும் பார்ப்போம் என்று கூறுகின்றாரே தவிர நடைமுறையில் அந்த விடயங்களை காணக்கூடியதாக இல்லை. அவருடைய நடையை மாத்திரம் தான் காணக்கூடியதாக இருக்கின்றது. பூரணை தினத்தில் தையிட்டிக்கு வந்து வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் என சொல்கின்றார் ஆனால் அந்த தையிட்டி விகாரை சட்டவிரோதமாக கட்டப்பட்டது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது பற்றி தெரியவில்லை. திருகோணமலையில் நடந்த சம்பவம் பிழையென்று கூறுகின்றார் ஆனால் இன்றுவரை அந்த சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர்சிலை அவ்விடத்தில் இருந்துகொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பில் எமது தமிழர் நிலங்களில் தொல்பொருள் ஆக்கிரமிப்பு நடக்கின்றது.

நாங்கள் இனவாதிகளல்லர் என்று சொல்கின்றார் ஆனால் அதற்கு மாறாக இங்கு நடந்துவருகின்றது. இதேபோல் வவுனியாவில் கிவுலோயா என்ற திட்டத்தின் கீழ் கடந்த கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில்கூட செய்யாத சில விடயங்களை செய்து தமிழர்களின் விவசாய நிலத்தை முழுமையாக அழிக்கப்பார்க்கின்றனர்.

நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாகவோ எதிராகவோ கருத்து வெளியிடுவது எமது மக்களுக்காகவே தவிர எங்களுடைய தேவைக்காக அல்ல. எமது தமிழ்மக்களின் அரசியல் உரிமைக்காக இந்த ஆண்டிலும் எமது முழுமையாக அழுத்தங்களை கொடுத்து மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுத்து தமிழ் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், நிரந்தரமாக அரசியல் தீர்வையும் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்காகவும் இலங்கை தமிழரசுக் கட்சி மாத்திரம்தான் தமிழ் மக்களின் சார்பில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

கல்வி மறுசீரமைப்பு சம்பந்தமாக எங்களுக்கு பல கேள்விகள் இருக்கின்றன. கல்வி மறுசீரமைப்பு என்பதும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதும் இரண்டு விடயங்களாகும். எதிர்க்கட்சியில் இருக்கின்ற பலர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்துக்கொண்டு அதனை கல்வி மறுசீரமைப்பு விடயத்தினுள் போட்டுக் குழப்பிக்கொண்டு இன்று இதுதொடர்பில் பெரிய பிரச்சினை வந்திருக்கின்றது.

ஆறாம் ஆண்டு பாடப்புத்தகத்திலே பொருத்தமற்ற சில பகுதிகள் இருப்பதாக பல இடங்களில் பேசப்பட்டுவருகின்றது. அந்த ஒரு விடயத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு கல்வி மறுசீரமைப்பு விடயத்தை ஒரு சிறு பிழைதான் என்று கூறமுடியாது. கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக எமது பிரதேசத்தில் இருக்கின்ற பேராசிரியர்கள், கல்விமான்கள், நிபுணர்கள் ஆகியோரின் அறிக்கைகளை நாங்கள் கேட்டு அவர்கள் அதனை தயார்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். வரலாற்று பாடப்புத்தகத்தை பார்த்தோமானால் அதில் ஒரு தரப்பினுடைய வரலாறு மாத்திரம்தான் பேசப்படுகின்றது. பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னுள்ள வரலாறு, முன்னுள்ள வரலாறு என இருவகை வரலாறுகள் உள்ளன. சிங்கள வரலாற்று பாடப்புத்தகங்களில் தமிழ் மன்னர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்தார்கள் என்பது பற்றி பார்க்க முடிவதில்லை. தமிழ் மன்னர்களை சிங்கள மன்னர்கள் தோற்கடித்தார்கள், அவர்கள் வேறு நாட்டிலிருந்து இங்கு வந்த அந்நியசக்திகள் என்று விஸ்தரிக்கின்றார்கள். 500வருடங்களுக்கு முன்னர் நடந்த வரலாறுகள் மாற்றப்பட்டுள்ளதுடன் 1948ஆம் ஆண்டுக்கு பின்னர் நடந்த வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் இந்த நாட்டுக்கு பிரித்தானியர்கள் வழங்கியபோது அவர்கள் வழங்கிய தீர்வினை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.எங்களை கட்டாயப்படுத்தி பெரும்பான்மை சமூகத்தின் கைகளில் எங்களை வழங்கிச்சென்றார்கள்.அதன் பின்னர் ஆட்சியதிகாரத்திற்கு வந்த சிங்கள அரசுகள் மேற்கொண்ட பல்வேறுபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அந்த வரலாறுகளைக்கூட மாணவர்களுக்கு கொண்டுசெல்லாத வகையிலேயே வரலாற்றுநூல்கள் உள்ளன.

2026இல் நடக்கும் கல்வி மறுசீரமைப்பில் கூட மாணவர்களின் வரலாற்றுநூல்களில் இவற்றினை சரிசெய்யாவிட்டால் எதிர்வரும் 30,40வருடத்தில் இந்த நாட்டில் தமிழர்களின் வரலாறு தெரியாத நிலையே மாணவர்களுக்கு ஏற்படும்.

இந்த நாட்டில் பல சிங்கள மக்களின் எண்ணம் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் வந்தேறு குடிகள் என்றாகும்.இங்கு நீங்கள் வாழமுடியாது தமிழ்நாட்டுக்கு செல்லுங்கள் என்று பலர் கூறுவார்கள்.இந்த நாட்டின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பது அறியாத நிலையே இந்த நாட்டில் காணப்படுகின்றது.பிரித்தானியாவின் காலப்பகுதியில் வேறுநாடுகளிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதே இந்த நாட்டில் உள்ள பல சிங்களவர்களின் எண்ணமாகவுள்ளது.இதனை மாற்றியமைப்பதற்கான சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்திஅரசாங்கம் இனவாதமில்லாத கட்சி,இனவாதம் இல்லாத ஆட்சி என்று கருதினால் இதனை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும்.இதன்காரணத்தினால்தான் இலங்கை தமிழரசுக்கட்சி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் எந்த தீர்மானத்தினையும் எடுக்கவில்லை.நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான கடிதத்தில் கையொப்பம் இடுவதில்லையென்ற தீர்மானத்தினை எமது கட்சிஎடுத்திருந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மூலமாக அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தோ,பிரதமருக்கு எதிராக வாக்களித்தோ அரசாங்கம் மாறப்போவதுமில்லை,எதுவும் நடைபெறப்போவதுமில்லை.ஆனால் தமிழர்களின் வரலாற்றினை பாடப்புத்தகத்தில் உள்ளடக்கவேண்டும் என்ற வகையிலான அழுத்தங்களை வழங்குவதற்காவது இதனை ஒரு நிபந்தனையாக முன்வைக்கவேண்டும் என்பதே எனதுநிலைப்பாடு.

கல்வி மறுசீரமைப்பு என்பது முக்கியமானதும் அவசியமானதுமான விடயம்.ஆனால் இதனை எவ்வாறு செய்யவேண்டும் என்பது தொடர்பில் தமிழர்கள் தரப்பிலிருந்தும் கருத்துகளை உள்வாங்கி மேற்கொள்ளவேண்டும்.என்றார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *