“மக்கள் தீர்மானித்தால் பதவி விலகத் தயார்” – பிரதமர் ஹரிணி!
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானித்தால், தாம் அந்தப்
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானித்தால், தாம் அந்தப் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது எதிர்க்கட்சிகள் கொண்டுவரவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.
“ஜனாதிபதியை நீக்க முடியாமல் போனதால், குறைந்தபட்சம் பிரதமரையாவது நீக்க முயற்சித்தார்கள். நான் இன்று காலை ஓடிவந்தது அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத்தான். அதற்காக நான் காத்திருந்தேன். ஆனால் ஏன் கொண்டுவரவில்லை? நாங்கள் அதற்குத் தயாராகவே இருந்தோம்.”
“நீங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரத் தேவையில்லை. இந்தப் பிரதமர் மாற வேண்டும் என்று நாட்டு மக்கள் எப்போது தீர்மானிக்கிறார்களோ, அப்போது நாம் வீட்டிற்குச் செல்லத் தயாராகவே இருக்கிறோம். நாம் நாட்டு மக்களுக்கே பொறுப்புக்கூற வேண்டியவர்கள். அதற்கேற்ப நாம் எமது பணிகளை முன்னெடுப்போம்.”
கல்விச் சீர்திருத்தங்களின் உள்ளடக்கத்தை எதிர்க்கட்சிகள் ஆழமாகப் படித்துவிட்டு, ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு முன்வர வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.