நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு காத்திரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும்
நமது நாட்டைப் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாக்க ....
நமது நாட்டைப் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாக்க வேண்டுமாயின், தரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பிரதான கருவி கல்வியாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வித் துறையில் ஒரு பரிவர்த்தனை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பெரும் அர்ப்பணிப்புடனும் முயற்சியுடனும் செயற்பட்டு வருவதாகவும், அந்தப் பயணத்தில் எத்தகைய தடைகள் ஏற்பட்ட போதிலும், உரிய இலக்கும் நோக்கமும் இருப்பதால் அவை அனைத்தையும் வெற்றிகொண்டு முன்னோக்கிச் செல்வோம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
2023/2024 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான கல்விச் கூட்டுறவுச் சங்க (EDCS) உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற “EDCS சிசு நெண பிரணாம” கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், வரையறுக்கப்பட்ட கல்விக் கூட்டுறவுச் சிக்கன சங்கத்தினால் (EDCS) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம், வெறும் கல்வி உதவித்தொகை வழங்குவது மாத்திரமன்றி, நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் ஒரு உன்னதமான சந்தர்ப்பமாகும் எனத் தெரிவித்தார்.
1930ஆம் ஆண்டில் 58 உறுப்பினர்களுடனும் ஒரு ரூபாய் அங்கத்துவக் கட்டணத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம், இன்று சுமார் இரண்டு இலட்சத்து பதினைந்தாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட தெற்காசியாவின் மிகப்பெரிய கூட்டுறவுச் சங்கமாக வளர்ச்சி பெற்றிருப்பது ஒரு விசேட வெற்றியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
உலகம் வேகமாக மாற்றமடைந்து வரும் விதம் மற்றும் பொருளாதார, சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மனித வள மேம்பாட்டின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலைக் கல்வியிலிருந்தே இன்றைய உலகிற்குப் பொருத்தமான வகையில் கல்வி முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்களுக்குப் பிரவேசிக்கும் மாணவர்கள் இந்த மாற்றத்தின் முன்னோடிகளாகவும் பங்குதாரர்களாகவும் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஆரம்பக் கல்வியில் இணையும் சுமார் மூன்று இலட்சம் மாணவர்களில் 40,000 பேர் மாத்திரமே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர் என்பதால், அந்த அரிய வாய்ப்பை நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துமாறு பிரதமர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரும் தொழில் பிரதி அமைச்சருமான மகிந்த ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ஊழலற்ற செயற்பாடுகள் காரணமாக இதற்கு முன்னர் 1,200 மில்லியன் ரூபாவாக இருந்த சங்கத்தின் நிதி ஸ்திரத்தன்மை, ஒன்பது மாதக் குறுகிய காலத்திற்குள் 1,700 மில்லியன் ரூபா வரை வளர்ச்சி அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டுத் திட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 2,292 பிள்ளைகளுக்காக 13.7 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
1984ஆம் ஆண்டு 15 மாணவர்களுடனும் 3,500 ரூபாவுடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 41 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 75,000 ரூபா வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது ஆசிரியர் சமூகத்தின் கூட்டு வலிமையைப் பிரதிபலிக்கின்றது.
இதன்போது, அடையாளச் சின்னமாக பிரதமரினால் சில மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கிவைக்கப்பட்டது
இந்நிகழ்வில் கல்விச் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் லால் குமார, மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தர்ஷனி இத்தமல்கொட உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.