இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்
இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தப்படவிருந்த 194 கிலோ கிராம் ....
இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தப்படவிருந்த 194 கிலோ கிராம் கஞ்சாவை தமிழ்நாட்டின் இராமநாதபுரம் கியூ-பிரிவு பொலிஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரம், பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக கார் ஒன்றை இடைமறித்து சோதனை நடத்தியுள்ளனர்.
சோதனை செய்தபோது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 97 மூட்டைகளில் 194 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பொலிஸார் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், குறித்த காரின் சாரதியான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கஞ்சா சென்னையில் இருந்து கடத்தப்பட்டு இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படவிருந்தது தெரியவந்தது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும், குற்றம் சாட்டப்பட்டவர்களையும் மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக கியூ பிரிவு பொலிஸார் ராமநாதபுரம் போதைப்பொருள் புலனாய்வுப் பணியகத்திடம் (NIB) ஒப்படைத்துள்ளனர்.
இந்தக் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்றவர்களை தற்போது விசாரித்து வருவதாக தமிழகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.