தேசிய மின் கட்டணக் கொள்கை நாளை அமைச்சரவைக்கு?

மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ்இ தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின்

Published February 8, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 6 min read

மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் நாளை (09) அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டம் 5 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதில் 04 கட்டங்கள் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, அடிப்படை கைமாற்றல் திட்டம், வருடாந்த மின் கொள்முதல் திட்டம், நீண்டகால மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் நீண்டகால மின் பரிமாற்ற அபிவிருத்தித் திட்டம் ஆகிய கட்டங்கள் இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை மறுசீரமைப்புச் செயலணியின் தலைவர் புபுது நிரோஷன் அண்மையில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இதன் இறுதிக் கட்டமான தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், அது நாளைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், மின்சார சபையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் வெளியிடவுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், 1969ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மின்சாரச் சட்டம் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, பெப்ரவரி மாதம் முடிவடைவதற்குள் இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக கலைக்கப்படும் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

இதனிடையே, மின்சார சபையை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய அதனை 4 நிறுவனங்களாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அந்த 4 நிறுவனங்களுக்கும் தற்போது நிர்வாகம் நியமிக்கப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களில் இணைக்கப்பட்டுள்ள மின்சார சபை ஊழியர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் கலந்துரையாடத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெளியிடப்படவுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மின்சார சபையில் சுயவிருப்ப ஓய்வு கோரியுள்ள ஊழியர்களின் பிரச்சினையும் முடிவுக்கு வருவதுடன், அதற்கமைய அவர்களுக்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் சுயவிருப்ப ஓய்வு கோரியவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகளும் அதற்கமைய முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி, மின்சார சபையின் 2,173 ஊழியர்கள் சுயவிருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்திருந்த போதிலும், பின்னர் அந்த ஊழியர்களின் ஓய்வுபெறும் திகதியை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாததால், அவர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக ஜனாதிபதி, எரிசக்தி அமைச்சர் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கும் பல சந்தர்ப்பங்களில் கடிதங்களை அனுப்பியுள்ள அந்த ஊழியர்கள், இந்தப் பிரச்சினைக்குத் துரித தீர்வினைப் பெற்றுத் தருமாறும், அதற்கான தலையீடுகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், சுயவிருப்ப ஓய்வு கோரிய ஊழியர்கள் விரும்பினால் கடந்த ஜனவரி 30ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை மீளப் பெற முடியும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.எஸ்.ஐ.குமார அண்மையில் அறிவித்திருந்தார்.

அதற்கமைய, சுயவிருப்ப ஓய்வு கோரிய ஊழியர்களில் 20க்கும் குறைவான மிகச் சிறிய எண்ணிக்கையிலானோர் தமது விண்ணப்பங்களை மீளப் பெறத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, 2,153 ஊழியர்களுக்கு சுயவிருப்ப ஓய்வு பெறுவதற்கான அனுமதி கிடைத்துள்ளதுடன், அவர்களுக்குரிய நட்டஈட்டுத் தொகையும் எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *