“சிசு செரிய” சேவையை மேலும் விரிவுபடுத்த ஹரிணி தலைமையில் அரசு தீர்மானம்!

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பில், பிரதமர் ஹரிணி

Published February 9, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று, இன்று (09) முற்பகல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கான அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்குரிய ஒழுங்குவிதிகளின் வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த வரைவில் உள்ள விடயங்கள் மற்றும் அதில் சேர்க்கப்பட வேண்டிய புதிய முன்மொழிவுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பாடசாலை மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது எழும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், மாணவர் போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகளைக் குறைத்து முறையான போக்குவரத்து பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் “சிசு செரிய” (Sisu Sariya) பாடசாலை போக்குவரத்து சேவையை மிகவும் வினைத்திறனான முறையிலும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்துதல், சிறுவர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து மாணவர் போக்குவரத்தின் போது பதிவாகும் துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுத்தல், மாணவர் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்தி அதனை ஒரு பொறுப்புமிக்க சேவையாக மாற்றுவது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.

இதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியன இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *