”மாவை தமிழரின் சரித்திரம்” நினைவேந்தல் நிகழ்வு…

இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவர் அமரர் மாவை .......

Published February 9, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவர் அமரர் மாவை சோ. சேனாதிராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற “மாவை தமிழரின் சரித்திரம்” நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அறிமுக உரையாற்றியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :

​”மாவை என்னும் ஓர் அரசியல் பெருவிருட்சத்தின் விடைபெறுதல் என்பது வெறும் தனிமனித மறைவல்ல; அது ஒரு சகாப்தத்தின் மௌனம்.” ஈழத் தமிழர்களின் விடுதலை எனும் மிகப்பெரிய கனவுகளைச் சுமந்து, தன் இளமைக்காலம் முதல் விழிமூடும் இறுதிக்கணம் வரை அந்தக் கொள்கைக்காகவே வாழ்ந்த ஒரு பெருமனிதன் மாவை அண்ணன் அவர்கள். சிறை மீண்ட செம்மலாய் இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி, இனமொன்றின் குரலாக ஏறக்குறைய ஐந்து தசாப்தங்கள் அரசியல் பணிபுரிந்த ஓர் உன்னத ஆளுமையின் பிரிவு, இன்னமும் எங்களுக்குள் துயரினைத் தந்துகொண்டுதான் இருக்கிறது” என தெரிவித்தார்.

“நாங்கள் பஞ்சு மெத்தையில் கிடந்து நிம்மதியாக அரசியல் செய்தவர்கள் அல்ல. தினமும்,பொழுதுமாக சிங்கள அரசின் நெருக்கடிகளுக்கும், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மக்களோடு நின்று அரசியல் பணிபுரிந்து வந்தவர்கள். அத்தகைய சூழல்களில் எல்லாம் எம் அருகில் நின்றவர் மாவை அண்ணன் அவர்கள்.

என்னை அரசியலில் புடமிட்டு அடையாளம் தந்து அழகு பார்த்தவர் அவர். என்னை மட்டுமல்ல, இங்கே அமர்ந்திருக்கும் அநேகமானவர்களை வழிப்படுத்தியவர். ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்!’ என அடிக்கடி கட்சியின் கடந்த கால வரலாற்றைச் சுட்டிக்காட்டி, தமிழரசுக் கட்சி பயணப்பட வேண்டிய பாதையைத் தெளிவுபடுத்திய அரசியல் ஆசான் அவர். அவரது அரசியல் பணியும் அதற்காக அவர் தாங்கிய வலியும் காலத்தால் நிலைத்து நிற்கும்” எனத் தனது உரையினை நிறைவு செய்தார்.

​கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிவகுமார் ஸ்ரீரஞ்சன், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் ஆகியோர் தொடக்க உரைகளை ஆற்றினர். மறைந்த பேராளுமை அமரர் மாவை சோ. சேனாதிராஜா அவர்களின் நினைவுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் K.T. கணேசலிங்கம் நிகழ்த்தினார்.

​இந்நிகழ்வில், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளர் அனந்தி சசிதரன், திருமதி பானுமதி சேனாதிராஜா, திரு. இளங்கோவன் சந்திரகாசன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், போராளிகள் நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *