வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும்!

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர்

Published February 13, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இம்முறை வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் உபாலி சமரசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.02.2026இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது பொலிசாரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தோடு பக்தர்களுக்குரிய குடிநீரை ஆலயப்பகுதிக்குள் எடுத்துச்செல்வதற்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்கதர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

எனவே இம்முறை சிவராத்திரி தினவழிபாடுகளுக்கு அவ்வாறான இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாது. சைவமக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான சைவமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டுமெனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இம்முறை தடைகளின்றி சுதந்திரமாக மக்கள் வழிபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களால் பதில் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதருகின்ற அடியவர்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வவுனியா வடக்கு பிரதேசசபைத் தவிசாளருக்கு இதன்போது நாடாளமேன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *