புதிய வக்பு சபை நியமனங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வக்பு சபை

Published February 16, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வக்பு சபை உறுப்பினர்களின் பட்டியல், தகுதியின் அடிப்படையிலான நியமனமாக அன்றி, அரசியல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கமாக அமைந்திருப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய சமாதான முன்னணி உறுப்பினராக இருந்த ஏ.எம்.ஜே.எம். ஜவ்பர், கடந்த வாரம் தனது பதவியிலிருந்து விலகி தற்போது வக்பு சபை உறுப்பினராக நியமனம் பெற்றுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் போது, கொழும்பு மாநகர சபை மற்றும் கொட்டிகாவத்தை பிரதேச சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக இக்கட்சி செயற்பட்டிருந்தது. அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தமைக்காக வழங்கப்பட்ட ஒரு அரசியல் இலஞ்சமாகவே இந்த நியமனத்தை பார்க்க வேண்டியுள்ளது.

வக்பு சபை என்பது அரசியல் சார்பற்ற முறையில் இயங்க வேண்டிய ஒரு பொது நிறுவனம். ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால செயற்பாட்டாளராகவும், அக்கட்சியின் சார்பில் தொடர்ச்சியாக தேர்தல்களில் போட்டியிட்டவருமான எம்.ஐ.எம். பௌஸான் (சான் முஹம்மத்) போன்றவர்களை இச் சபைக்கு நியமித்திருப்பதன் மூலம், இந்தச் சபை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

முஸ்லிம் சமூகத்தின் மத மற்றும் கலாசார விழுமியங்களுடன் தொடர்புடைய ஒரு சபைக்கு, ஒரு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலை (துவான் நசீர் மஜீத்) நியமித்திருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும். சிவில் நிர்வாக அமைப்புகளுக்குள் இராணுவ அதிகாரிகளை புகுத்தும் போக்கை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தொடர்வது, வக்பு சபையின் சுயாதீனத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி, தமக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், தமது கட்சி உறுப்பினர்களுக்கும் பதவிகளைப் பகிர்ந்தளிக்கும் பழைய அரசியல் கலாசாரத்தையே பின்பற்றி வருகிறது. புனிதமான வக்பு சபையின் கௌரவத்தையும், அதன் நோக்கத்தையும் சீர்குலைக்கும் இத்தகைய அரசியல் நியமனங்களை சமூக நலன் கருதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *