பிரதமரிடம் ரவிகரன் எம்.பி கடிதத்தின் மூலம் கோரிக்கை

வடமாகாணத்தில் நிலவும் சமச்சீரற்ற ஆசிரியர் பரம்பலால் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட

Published February 22, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 8 min read

வடமாகாணத்தில் நிலவும் சமச்சீரற்ற ஆசிரியர் பரம்பலால் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைமேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரியவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை வன்னி தேர்தல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக காணப்படும் கர்நாடக சங்கீத ஆசிரியர் பற்றாக்குறைக்கும் வடமாகாணம் முழுவதும் காணப்படும் இந்து நாகரீக ஆசிரியர் பற்றாக்குறைக்கும் போதுமான ஆசிரியர் வளத்தை வழங்குவதற்கான பொருத்தமான மற்றும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மேலும் குறித்த கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 19.02.2026அன்று பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வன்னி பிராந்தியத்தில் நிலவும் கல்விசார் ஆசிரியர் பற்றாக்குறைகளுக்குரிய தொடர் நடவடிக்கை தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

மேற்படி கடிதம், கடந்த 2026.02.17 அன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய சட்டமூலம் (நீக்குதல்) தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் எம்மால் முன்வைக்கப்பட்ட வன்னிப் பெருநிலப்பரப்பின் கல்வி சார் குறைபாடுகளின் தொடர் நடவடிக்கைக்குரியது.

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில், கல்வி அமைச்சினால் கடந்த 2026.02.02 அன்று அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இலங்கை முழுவதும் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இப்பாரிய அளவிலான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முயற்சிக்கு, வன்னி தேர்தல் மாவட்டத்தை சார்பாக்கும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

எனினும், குறித்த ஆட்சேர்ப்பு செயன்முறையில் வன்னி மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கர்நாடக சங்கீதம், இந்துநாகரீக பாடங்களுக்குரிய ஆசிரியர் பற்றாக்குறை உரிய முறையில் கருத்திற் கொள்ளப்படாமை குறித்த தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

இந்து நாகரீக பாடத்தில் வடமாகாணத்தில் 75% ஆசிரியர்களே காணப்படுவதாக வடமாகாணக் கல்வித் திணைக்கள புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுகிறது. மேலும் இப்பற்றாக்குறை வன்னிப்பிராந்தியத்தில் உள்ள 6 கல்வி வலயங்களில் மேலும் பின்னடைவான பற்றாக்குறையை காட்டுகிறது. குறிப்பாக, மடு 40%, முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் – 50%. பதிவுகளின் அடிப்படையில் வடமாகாணத்தில் 32 ஆசிரியர்கள் இந்துநாகரீக பாடத்தில் பற்றாக்குறையாக காணப்படுகின்றனர்.

மேலும் கர்நாடக சங்கீத பாடத்தில், வடமாகாணத்தில் ஆசிரியர்கள் மிகையாக உள்ள போதும் சில ஆண்டுகளாக தொடர்ந்தும் வன்னிமாவட்டத்தில் உள்ள 6 கல்வி வலயங்களிலும் மேற்படி பாடத்திற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்றனர். (மடு 38%, வவுனியா வடக்கு 43%). யாழ்ப்பாணத்தில் மேற்படி பாடத்திற்கு 81 ஆசிரியர்கள் மிகையாக உள்ள போதும் வன்னி மாவட்டத்தில் 46 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். யாழ்ப்பாணத்தில் மேற்படி பாடத்திற்கு மிகையாக உள்ள ஆசிரியர்கள் ஆரம்பக்கல்வியைக் கற்பிப்பதற்கு வழிப்படுத்தப்படுவதையும் அறியமுடிகிறது. இந்நிலையில் வன்னி பிராந்தியத்தில் உள்ள பிள்ளைகள், மேற்படி பாடத்தைக் கற்பதற்கு ஆசிரியர்கள் இன்றி கர்நாடக சங்கீத பாடத்தை அழகியல் பாடங்களில் தெரிய இயலாத நிலையில் உள்ளனர்.

எனவே, வடமாகாணத்தில் நிலவும் சமச்சீரற்ற ஆசிரியர் பரம்பலால் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், வன்னி தேர்தல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக காணப்படும் கர்நாடக சங்கீத ஆசிரியர் பற்றாக்குறைக்கும் வடமாகாணம் முழுவதும் காணப்படும் இந்து நாகரீக ஆசிரியர் பற்றாக்குறைக்கும் போதுமான ஆசிரியர் வளத்தை வழங்குவதற்கான பொருத்தமான மற்றும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் கடந்த 18.02.2026 வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்துநாகரீகப் பாடத்திற்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த 20.02.2026அன்று நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுக்கூட்டத்தில் வடமாகாணத்திலுள்ள சமச்சீரரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தை சீர்ப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் வலியுறுத்தப்பட்ட நிலையில், வடக்குமாகாண ஆளுநர் ஊடாக குறித்த சமச்சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தைச் சீர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *