மட்டு ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நில அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடல்
மட்டு ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக
மட்டு ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிகள், பண்ணையாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் என பலரையும் ஒருங்கிணைத்து வடகிழக்கில் நடைபெறும் நில அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது.
நேற்று மாலை மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வடகிழக்கில் நடைபெறும் நில அபகரிப்புக்கள், அதனை எவ்வாறு தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
மிக முக்கியமாக தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட உள்ள கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டம் அதனால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள், கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக ஏற்படப் போகும் நில அபகரிப்பு பிரச்சினைகள்,மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் நில அபகரிப்பு தொடர்பாகவும், ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடலுக்கான பொதுக் கட்டமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இக் கூட்டத்தின் வளவாளராக முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன் அவர்கள் கலந்து கொண்டு வடகிழக்கில் நடைபெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பான தெளிவான விளக்கங்களை வழங்கியதோடு. சட்ட ரீதியான எடுக்கபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக கட்சி பேதங்களால், தனி தனியாக அமைப்புகளாக பிரிந்து நின்ற அனைவரையும் ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவரும் முயற்சியின் முதலாவது கூட்டமாக மேற்படி கூட்டம் வெற்றியளித்துள்ளதோடு தொடர்ந்து இன்னும் பல அமைப்புகளை இணைத்துக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராயும் ஒரு பொதுக் கட்டமைப்பாக ஒரு குடையின் கீழ் இயங்குவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
இதன்போது அடுத்த கூட்டத்தில் நில அபகரிப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை தயாரிப்பது என்றும், அந்த ஆவணம் தயாரிக்கப்பட்டு அது குறித்து துறை சார்ந்த தொழிநுட்பவியலாளர்களை கொண்டு திருத்தம் செய்யப்பட்டு காணி அபகரிப்புக்கு தொடர்பான இறுதி வரைபை தயாரிப்பதோடு. குறித்த வரைபின் பிரகாரம் காணி அபகரிப்புக்கு நடைபெறும் இடங்கள், காணி அபகரிப்பை மேற்கொள்ளும் திணைக்களங்கள், ஏனை கட்டமைப்புகள்,தனிநபர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக ஆராய்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.

