2 வெளிநாட்டு விமானப் பயணிகள் கைது
ரூபாய் 3 கோடி 22 இலட்சம் பெறுமதியான “குஷ்” மற்றும் “ஹஷீஷ்” போதைப்பொருள்
ரூபாய் 3 கோடி 22 இலட்சம் பெறுமதியான “குஷ்” மற்றும் “ஹஷீஷ்” போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்து, அவற்றை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற 2 வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 26 மற்றும் 37 வயதுடைய இந்தியப் பிரஜைகள் ஆவர்.
அவர்கள் இன்று அதிகாலை 01.59 மணிக்கு தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து எயார் ஏஷியா விமான சேவையின் FD-142 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த கைப்பைகளில், இரண்டு பொதிகள் அடங்கிய நான்கு பாக்கெட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த “குஷ்” போதைப்பொருள் 3 கிலோ 38 கிராம் மற்றும் “ஹஷீஷ்” போதைப்பொருள் 182 கிராம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலதிக விசாரணைக்காக, குறித்த இருவரும் அவர்கள் கொண்டு வந்த போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்த தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.