உலக மனிதவடிவ ரோபோ உற்பத்தியில் சீனாவின் ஆதிக்கம்!

சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற உலக மனிதவடிவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர், மனிதவடிவ ரோபோக்களை இராணுவப் பயிற்சி தளங்களிலும் போர்க்களங்களிலும் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ‘PLA டெய்லி’, ஆய்வகங்களில் உருவாக்கப்படும் அதிநவீன தொழில்நுட்பங்களை விரைவாக இராணுவ பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மனிதவடிவ ரோபோக்களில் சுமார் 95 சதவீதத்தை சீன நிறுவனங்களே தயாரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உற்பத்தி ஆதிக்கத்தை இராணுவத் துறையிலும் பயன்படுத்த சீனா முயற்சித்து வருகிறது.
கட்டடங்கள், சுரங்கங்கள் மற்றும் கப்பல்கள் போன்ற ஆபத்தான பகுதிகளில் மனித வீரர்களுடன் இணைந்து செயல்படும் வகையில் போர்க்கள ரோபோக்களை உருவாக்கும் திட்டங்களையும் சீன இராணுவ ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, சீன அரசுடமை பாதுகாப்பு நிறுவனமான நொரின்கோ உருவாக்கியுள்ள ‘புசி’ என்ற மனிதவடிவ ரோபோ, தொலைதூர மனிதக் கட்டுப்பாட்டின் மூலம் கண்காணிப்பு மற்றும் ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், அமெரிக்க இராணுவமும் கடந்த ஆண்டு முதல் இராணுவ பயன்பாட்டிற்கான மனிதவடிவ ரோபோ தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் திட்டங்கள் மற்றும் போட்டிகளை முன்னெடுத்து வருகிறது.
இருப்பினும், மனிதவடிவ ரோபோக்களின் உற்பத்தி அளவில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.




