சட்டவிரோதமாக மலேசியாவுக்கு கொண்டு செல்ல முயன்ற “நட்சத்திர” ஆமைகள் – இருவர் கைது
ரூ. 1 கோடி 35 இலட்சம் மதிப்புள்ள “நட்சத்திர” ஆமைகள் 25 ஐ சட்டவிரோதமாக மலேசியாவிற்கு
ரூ. 1 கோடி 35 இலட்சம் மதிப்புள்ள “நட்சத்திர” ஆமைகள் 25 ஐ சட்டவிரோதமாக மலேசியாவிற்கு கடத்த முயன்ற இலங்கை விமானப் பயணிகள் இருவரை நேற்று காலை பண்டாரநாயக்க விமான நிலையம் புறப்படும் முனையத்தில் பணியில் இருந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் இலங்கை சுங்கத்தின் உயிரினப் பல்வகைமை, பண்பாட்டு மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவர்கள் கொழும்பு – கொலொன்னாவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 45 வயதுடைய, செல்லப்பிராணி விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இருவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் நேற்று காலை 7.40 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரம் நோக்கி ஸ்ரீலங்கன் ஏயர் லைன்ஸ் நிறுவனத்தின் UL-314 என்ற விமானத்தில் புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அவர்கள் எடுத்துச் சென்ற இரண்டு பயணப்பைகளில் ஈரமான துணிகளில் மடித்து இந்த ஆமைகளை மறைத்து வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாமைகள் இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டதுடன், அழிவின் அபாயத்தில் உள்ள இனமாகவும்இ வனவிலங்கு மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக ஒப்பந்தமான ஊஐவுநுளு பட்டியலில் சேர்க்கப்பட்டு சர்வதேச வர்த்தகத்திற்கு தடை செய்யப்பட்ட இனமாகவும் உள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த இருவரும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நாளை மறுதினம் வரை தடுப்பு காவல் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன், மீட்கப்பட்ட ஆமைகளை உரிய பராமரிப்புடன் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் இலங்கை சுங்கத்தின் உயிரினப் பல்வகைமை, பண்பாட்டு மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.