எரிபொருள் விலை உயர்வு குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

எரிபொருள் கையிருப்பு இருக்கிறபோதும், விலை உயர்வின் காரணத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸம் விளக்கமளித்தார். 

Published March 10, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

எரிபொருள் கையிருப்பு இருக்கிறபோதும், விலை உயர்வின் காரணத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸம் விளக்கமளித்தார். 

கடந்த சில நாட்களில் நாட்டில் எரிபொருள் நுகர்வு அதிகளவில் காணப்பட்டதாகவும், அதன் காரணமாக கையிருப்புகள் ஓரளவுக்கு குறைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில், புதிதாக ஓடர் செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் புதிய விலையிலேயே இலங்கைக்கு வந்தடைந்ததால், இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார். 

இது குறித்து மேலதிகமாக விளக்கமளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ: 

“தற்போது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 37.76% அதிகரித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களைப் பொறுத்தவரை, ஓட்டோ டீசல் 99.99%, சுப்பர் டீசல் 99.6%, 92 வகை பெற்றோல் 75% மற்றும் 95 வகை பெற்றோல் 79% வரை விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தை நாங்கள் கவனத்தில் கொண்டோம். எங்களிடம் கையிருப்பு இருந்தது. நாம் ஓடர் செய்த தொகுதிகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும்போது, அதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் நிலவும் சராசரி விலையிலேயே அதன் இறுதி விலை தீர்மானிக்கப்படுகிறது. 

இந்த உலகளாவிய விலை அதிகரிப்புக்கு மத்தியில் நாம் விலையை அதிகரிக்காவிட்டால், தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம். அது எரிபொருள் விநியோகத்தில் தடையை ஏற்படுத்தும். மற்றைய விடயம், கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட அதிகப்படியான எரிபொருள் நுகர்வு. பொதுவாக ஒரு நாளைக்கு 4,000 மெட்ரிக் தொன் டீசலே நுகரப்படும், பெற்றோல் அதைவிடக் குறைவு. ஆனால் மார்ச் 1 முதல் 9 வரையான காலப்பகுதியில் 59,200 மெட்ரிக் தொன் டீசலும், 47,500 மெட்ரிக் தொன் பெற்றோலும் நுகரப்பட்டுள்ளன. அதாவது கடந்த சில நாட்களில் மட்டும் மேலதிகமாக சுமார் 13,000 மெட்ரிக் தொன் பெற்றோலும், 23,000 மெட்ரிக் தொன் டீசலும் நுகரப்பட்டுள்ளன. 

இந்த அதீத நுகர்வினால் எமது கையிருப்பில் இருந்த எரிபொருள் முழுமையாகத் தீர்ந்துவிட்டது. இதனால் புதிய தொகுதிகளை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது, அந்தப் புதிய கப்பல்கள் அதிக விலையிலேயே வந்தன. இந்த காரணங்களாலேயே விலையை உயர்த்த வேண்டியிருந்தது. உண்மையில் அதிகரிக்க வேண்டிய தொகை இன்னும் அதிகம், ஆனால் அத்தகைய பாரிய விலை உயர்வை எமது பொருளாதாரம் தாங்க முடியாது என்பதால் இந்த அளவில் விலை உயர்த்தப்பட்டது. மறுபுறம், இந்த விலை உயர்வு மூலம் பொதுமக்கள் எரிபொருள் நுகர்வை ஓரளவுக்குக் குறைத்துக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.”

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *