வரைபடத்தில் இல்லை என கூறி மூடப்பட்ட புகையிரத கடவை : யாழ்ப்பாணத்தில் பரபரப்பு

யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நீண்ட...........

Published March 22, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த புகையிரத கடவை முற்றாக மூடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை மீண்டும் நிரந்தர பாதுகாப்புடன் திறந்துவிடக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர் .

1990ஆம் ஆண்டிற்கு முன்பாக இந்தப் பகுதியில் புகையிரத கடவை இருந்ததற்கான உத்தியோகபூர்வ வரைபடங்கள் இல்லை எனக் கூறி, இங்கு கடவை அமைக்க புகையிரத திணைக்களம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இருப்பினும், மக்கள் தங்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காக அங்கே தற்காலிக ஏற்பாடுகளைச் செய்து பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.

குறித்த பகுதியை பாதுகாப்பு கடவையாக மாற்ற யாழ். மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் புகையிரத திணைக்களம் மற்றும் பொலிஸார் அண்மையில் முற்றாக அகற்றியதுடன், வாகனங்கள் செல்ல முடியாதவாறு பாதையைத் தடுத்தனர்.

நேற்று (சனிக்கிழமை) சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், அதிகாரிகளுடன் பேசி நிரந்தர பாதுகாப்பு கடவையை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

ஆயினும், இந்த விவகாரத்தில் ஏனைய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன், இன்று காலை அப்பகுதி மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். “எமது நீண்டகாலப் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்து” மற்றும் “பாதுகாப்பான கடவையை அமைத்துத் தா” போன்ற கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர்.

“பல வருடங்களாக நாம் இந்தப் பாதையைப் பயன்படுத்துகிறோம். வரைபடத்தைக் காரணம் காட்டி எமது அன்றாட போக்குவரத்தைத் தடுப்பது நியாயமற்றது,” என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் மக்கள் எச்சரித்துள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *