வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
அனைத்து வாக்காளர்களும் சகல தேர்தல்களிலும் வாக்களிப்பது கட்டாயமென்றும், இதற்கான சட்டக் கொள்கைகள் உருவாக்கப்பட்ட வேண்டுமெனவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர், வாக்களிப்புகளில் ஈடுபடவில்லையென சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, இலங்கையின் தேர்தல் முறைமை குறித்துப் பரிந்துரைகளை முன்வைத்துள்ள ஆணைக்குழு, தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று அவசியம் எனவும் பரிந்துரைத்துள்ளது.
பலவீனமான அரசாங்கம் ஒன்று காணப்பட்டதன் காரணமாக, இலங்கையில் தாக்குதல்களை நடத்தலாம் என, சஹ்ரானின் குழு எண்ணியதாக சாட்சியங்கள் கிடைத்துள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், வேறொரு கட்சியுடன் இணைவதைத் தடுப்பது தொடர்பான ஏற்பாடுகளை, ஒன்றிணைக்கும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.