கூட்டமைப்பினரும் பொறுப்புக் கூற வேண்டுமாம் – மஹிந்த தரப்பு கூறுகின்றது!

0

மாகாண சபைத் தேர்தல் இதுவரை காலமும் பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் பொறுப்புக் கூற வேண்டுமென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்கள் தனித்துச் செல்வதற்கு முன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் இதுவரை காலமும் பிற்போடப்பட்டு உள்ளமைக்கு எதிர்க்கட்சியினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருமே பொறுப்புக் கூற வேண்டும்.

இந்நிலையில், மாகாண சபைத் தேர்தலிலும் கூட்டணியாகவே போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். இத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே அதிக மாகாண சபைகளைக் கைப்பற்றும்.

கூட்டணியில் இருந்துக் கொண்டு சுதந்திர கட்சியினர் குறிப்பிடும் கருத்துகள் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் உள்ளன.

எவ்வாறாயினும், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பிறகே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.