மட்டு.பண்ணையாளர்களின் மற்றுமொரு மேய்ச்சல் தரை இராணுவத்தினரால் அபகரிப்பு

0

மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மற்றுமொரு மேய்ச்சல் தரை, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கந்தர்மல்லிச்சேனை பகுதியிலுள்ள மேய்ச்சல் தரை காணிகளே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பாக மக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை தெரிவித்து வந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) கள விஜயமொன்றினை ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன், இரா.சாணக்கியன், மண்முனை மேற்கு, பட்டிப்பளை, போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள்  ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த விஜயத்தினை தொடர்ந்து அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, “குறித்த பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு, சுமார் 1500 ஏக்கர் காணியில், சிவில் பாதுகாப்பு படையினர், முந்திரிகை செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வன இலாகா மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியில்லாமல் சிவில் பாதுகாப்பு படையினர் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், குறித்த பகுதியிலுள்ள நிலங்களை 2 ஏக்கர் வீதம், பெரும்பான்மையின மக்களுக்கு  வழங்குவதற்கான நடவடிக்கையாகவே இதனை பார்க்க  தோன்றுகின்றது.

தமிழர்களின் விகிதாசாரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துவதே இந்த செயற்பாட்டின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

இதேவேளை குறித்த பகுதியில் கால்நடைகளை வளர்ப்பவர்கள் ஒரு மரத்துண்டினை வெட்டிச்சென்றாலும் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வனஇலாகாவினர், படையினரின் இத்தகைய செயற்பாட்டிற்கு எந்ததொரு நடவடிக்கையும் முன்னெடுக்காமல் இருக்கின்றனர்.

இதில் அரசாங்கத்தின் சூழ்ச்சி நன்றாக வெளிப்பட்டுள்ளது” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.