காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கத் தயார்! அரசாங்கம் அறிவிப்பு

0

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமெனில் அதனை வழங்க எவ்வித எதிர்ப்பும் இல்லை.

எவ்வாறாயினும், காணாமல்போனோர் ​தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது. கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இதனை நியமித்தோம்.

ஜனநாயக சமூகத்தில் தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இருக்கும் என்று தெரிவிக்க முடியாது. அன்று இடம்பெற்ற விடயங்கள் முற்றிலும் மாறுபட்டவை.

யுத்த கால்பகுதி, நாளை என்பது நம்பிக்கையற்றதாகவே இருந்தது. மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட விடயதானங்களும் இருந்தன.

அது நாட்டில் தொடருமானால் இதனை ஜனநாயக நாடு என்று கூறமுடியாது.

எப்போதும் காணாமல் போனவர்கள் தொடர்வார்களாயின் அதற்கு ஆணைக்குழுக்கள் அவசியம் என்றால் நாட்டில் வேறு பிரச்சினைகள் இருப்பதாகவே தோற்றப்பாடு ஏற்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.