சுனில் உள்ளிட்ட இராணுவ சிப்பாய்கள் மிருசுவிலில் 8 பேரை கொலை செய்து, கழுத்தை அறுத்து புதைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
மரண தண்டனை கைதியாக தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவை விடுதலை செய்யவும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஒரு மரண தண்டனை கைதியை விடுவிக்க சில பொறிமுறைகள் உள்ளன. இங்கு அவை பின்பற்றப்படவில்லை. ஜனாதிபதி பின் கதவால் தீர்மானங்களை எடுக்கின்றார்.
மரண தண்டனை கைதியை விடுவிக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் பரிந்துரை முன்வைக்க வேண்டும். பின்னர் ஓய்வுபெற்ற சட்டமா அதிபர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும். பாரிய குற்றம் செய்தவர் தொடர்பில் ஜனாதிபதிக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டும்.
நன்னடத்தை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இவை அனைத்தும் இங்கு பின்பற்றப்படவில்லை. இந்த அரசாங்கம் மரண தண்டனை கைதி சுனில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்தது.
சுனில் உள்ளிட்ட இராணுவ சிப்பாய்கள் மிருசுவிலில் 8 பேரை கொலை செய்து, கழுத்தை அறுத்து புதைத்தனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட அவரை விடுதலை செய்துள்ளீர்கள். நீங்கள் எவ்வாறு அத்தகைய செயல்களை அங்கீகரிப்பீர்கள்.
கொலைகாரன் கொலைகாரன் தான். பிரேமாவதி மனம்பேரியை கொன்றதும் இராணுவ சிப்பாயே. அவர் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார். இராணுவ வீரரர்களை விடுவிக்கின்றோம் என நீங்கள் கொடி தூக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.