ஒரே நாளில் ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு!

0

கோரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகே ஸ்தம்பிதமாகியுள்ள நிலையில் இலங்கையிலும் குறித்த வைரஸ் தாக்கத்தின் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்க்காக இலங்கை அரசு ஊரடங்கு அமுல்படுத்தியுள்ளது.

இதனால் அன்றாடம் வருமானமீட்டும் குடும்பங்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகளை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு தொடர்ந்து விநியோகித்து வருகின்றது.

அந்த வகையில் இன்று காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட காலை 06.00 மணி தொடக்கம் 02.00 மணிவரையான காலத்திற்க்குள் எருவில், செட்டிபாளையம், ஆரையம்பதி, வவுணதீவு, மணிபுரம், மங்கிக்கட்டு, கொடுவாமடு மாவடிவேம்பு, சித்தாண்டி சவுக்கடி, சத்துருக்கொண்டான், கொக்குவில் ஆகிய பன்னிரண்டு கிராமங்களில் உள்ள 1000இற்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு அவ் அமைப்பின் தொண்டர்களினால் உலர் உணவுப்பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

பிள்ளைகளின் கல்வி, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரம், அனர்த்தங்களின் போதான உதவிகள் என்று கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக எம்மோடு கூடவே இரா.சாணக்கியன் தலைமையிலான இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு இருக்கின்றது என உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் சீ.மூ. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பிற்க்கும் அதன் தவிசாளர் இரா.சாணக்கியனுக்கும் நன்றி தெரிவித்தனர்.