குடும்ப பெண் படுகொலை : சூத்திரதாரியின் சகோதரன் கைது

குடும்ப பெண் படுகொலையில் தலைமறைவான பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட

Published September 7, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

குடும்ப பெண் படுகொலையில் தலைமறைவான பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில், குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை(30) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் கடந்த ஜுன் மாதம் 25ஆம் திகதி சந்தேகத்தின் அடிப்படையில், சகோதரிகளான இரட்டையர் குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டியில் பணிப்பெண்களாக பணியாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.

குறித்த கைது நடவடிக்கை படுகொலை நடைபெற்று 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த விசாரணையில் ஏதோ ஒரு அடிப்படையில் தொய்வு ஏற்பட்டதை உணர்ந்த படுகொலை செய்யப்பட்ட குடும்பப்பெண்ணின் கணவர் நாட்டின் ஜனாதிபதி உட்பட பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு பிரிவினர் என பல தரப்பினருக்கு உரிய நீதி கோரி கடிதம் ஒன்றினை எழுதி உரிய படுகொலையின் சூத்திரதாரிகள் என நம்பப்படும் பலரது பெயரினை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார்.

இதற்கமைய மீண்டும் துரிதமாக செயற்பட்ட அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் நீண்ட பல்வேறு வடிவங்களில் விசாரணைகளை முன்னெடுத்து களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் தான் இப்படுகொலையின் பிரதான சூத்தரதாரி என கண்டறிந்துள்ளதுடன், குறித்த கடையில் பணியாற்றிய உரிமையாளரின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் அண்மையில் கைது செய்தனர்.

இக்கைது நடவடிக்கையை அறிந்த பிரதான சந்தேகநபர் தற்போது அவரது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு தப்பி சென்ற நிலையில் அச்சந்தேக நபரை தேடி அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *