சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள்குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, எதிர்வரும் இரண்டு வாரங்களில் முதற்கட்ட விசாரணைகள் சம்பந்தமான தகவல்களை வெளியிடவுள்ளது.
அத்துடன் இன்று(05) முதல் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதியளித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள நுகர்வோர் அதிகார சபை, எரிவாயு மாதிரிகள், இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பெறப்பட்ட அறிக்கைக்கு அமைய தொழில்நுட்ப குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் எதிர்வரும் வாரத்தில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
அவர்களை நிபுணர் குழுவிற்கு அழைத்து வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அதன் தலைவர் சாந்த வல்பலகே தெரிவித்தார்.