எரிவாயு வெடிப்பு சம்பவங்களில் 7 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி செயலணி வெளியிட்ட தகவல்

0

நாட்டில் 2021ம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் இடம்பெற்ற சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான தேசபந்து தென்னக்கோன் தெ ரிவித்துள்ளாா்.

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதி வரை 847 சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.

மேலும், 52 சமையல் எரிவாயு குழாய்கள் சேதமடைந்துள்ளதுடன், 299 எரிவாயு கசிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

477 எரிவாயு அடுப்பு சேதமடைந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு எற்பட்ட வெடிப்பு சம்பவங்களில் 797 லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்களின் ஊடாக ஏற்பட்ட சேதங்கள் என அவர் கூறுகின்றார்.

எஞ்சிய 50 சம்பவங்களும் லாஃப் நிறுவனத்திற்கு சொந்தமான சிலிண்டர்களினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களினால் 16 பேர் காயமடைந்துள்ளதுடன், 18 சம்பவங்களில் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் 28 லட்சம் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்துள்ளதுடன், அவற்றில் 797 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த காலப் பகுதியில் லாஃப் நிறுவனம் 2 லட்சத்து 80 ஆயிரம் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்துள்ளதுடன், அவற்றில் 50 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தரமான எரிவாயு சிலிண்டர்களை அடையாளம் கண்டுக்கொள்வதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் சிலிண்டர்களில் சிவப்பு நிறத்திலான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதன் பின்னரான காலத்தில் 12 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.