ஹக்கீம், ரிஷாட்டுடன் இனி கூட்டணி இல்லை – சஜித் அணி திட்டவட்டம்

0

எந்தவொரு தேர்தலாயினும் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கு மாகாணத்தில் தனித்தே போட்டியிடுமென்று கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

” இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி விட்ட தவறுகளை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செய்யமாட்டாது. நாட்டிலுள்ள 160 தொகுதிகளுக்கும் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தந்த தொகுதி அமைப்பாளர்களே பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவர்.

கட்சி சம்பந்தப்பட்ட எந்த வேலைத் திட்டமாயினும் அமைப்பாளர் ஊடாகவே முன்னெடுக்கப்படும்.

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் எம்முடன் இணைந்து எமது வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டு, எமது ஆதரவாளர்களினதும் வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து விடுகின்றனர்.

இதனால் நாடாளுமன்றத்தில் எமது கட்சியின் பலம் மலினப்படுத்தப்படுகிறது. மாற்றுக் கட்சியினருக்கு வாய்ப்பளிப்பதால் எமது கட்சி ஆதரவாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் இவ்வாறான தவறுகள் நடக்க இடமளிக்க மாட்டோமென்று உறுதியளிக்கிறேன். இது விடயத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மிகவும் உறுதியாக இருக்கிறார் என்றார்.