ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்!

0

ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்  நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான விஜயத்தின்போது ஜக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான இணைப்பாளரும் ஜக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் அமைப்பின் இணைச் செயலாளருமான வினோகாந்தின் அழைப்பின் பேரில் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கும் வருகை தந்தார்.

இவ்விஜயத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரதாச கலப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா இல்ல ஒன்று கூடல் மண்டபத்திற்கு வருகை தந்த அவர்கள் இங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு மற்றும் அம்பாரை மாவட்ட தமிழ் பிரதேசத்திற்கென ஒரு அரசியல் தலைவரை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஜக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார   தமிழ் பிரதேசங்களுக்கான இணைப்பாளர் வினோகாந்தினால் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமது கட்சியால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.

குறிப்பாக ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேசத்தில் நீர்ப்பாய்ச்சல் இன்றி கைவிடப்பட்டுள்ள 25 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். பசுப்பால் உற்பத்தியில் கவனம் செலுத்தப்படுவதுடன் கைவிடப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் இந்த நாடு அதளபாதாளத்தை நோக்கி நகர்வதாகவும் மக்கள் நாளாந்த வாழ்க்கையை கூட நடத்த முடியாமல் திண்டாடுவதாகவும் இதன் காரணமாக அதிகமான  ஊழல்மிகு அரசாங்கத்தை நிராகரிக்க மக்கள் விரைவில் ஒன்றுபடுவார்கள் மக்கள் வீதியில் இறங்கியுள்ளதையும் நினைவு படுத்தினார்.