நெல், சோளம் உள்ளிட்ட 6 பயிர்களுக்கு நஷ்டஈடு!

வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய அமைச்சர் கே.டீ. லால் காந்தவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அம்பாறை, அனுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் மற்றும் சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்டங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, நெற்செய்கை தொடர்பில், மொனராகலையில் 1,334 ஏக்கர் பயிர்நிலங்களைச் சேர்ந்த 960 விவசாயிகளும், பொலன்னறுவையில் 1,100 ஏக்கர் நிலங்களைச் சேர்ந்த 560 விவசாயிகளும், அம்பாந்தோட்டையில் 435 ஏக்கர் நிலங்களைச் சேர்ந்த 782 விவசாயிகளும், அம்பாறையில் 1,004 ஏக்கர் நிலங்களைச் சேர்ந்த 505 விவசாயிகளும் மற்றும் அனுராதபுரத்தில் 2,200 ஏக்கர் நிலங்களைச் சேர்ந்த 1,900 விவசாயிகளும் என நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் மேற்படி மாவட்ட அதிகாரிகளினால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நஷ்டஈட்டுத் தொகை விவசாயிகளுக்கு கூடிய விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளது.
இங்கு பாதிக்கப்பட்ட நெல், சோளம் உள்ளிட்ட 06 வகையான பயிர்களுக்கு ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக 100,000/- ரூபாய் வீதம், அதிகபட்சமாக 05 ஏக்கர் வரை அரசாங்கத்தினால் நஷ்டஈடு வழங்கப்படும்.
அதன்படி, இந்த சூழ்நிலையில் மேற்படி மாவட்டங்களில் இருந்து இதுவரை பதிவாகியுள்ள பாதிக்கப்பட்ட 6,073 ஏக்கர் நெற்பயிர்களுக்கு உரித்தான சுமார் 4,707 விவசாயிகளுக்கு விரைவாக நஷ்டஈட்டுப் பணத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை மேற்கொண்டு வருகிறது.
இந்த வறட்சி நிலைமை காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டு நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்திருந்தால், கூடிய விரைவில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் கள அதிகாரிகளைச் சந்தித்துத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். அல்லது விவசாய அபிவிருத்தி மையங்களில் பராமரிக்கப்படும் சேத அறிவிப்புப் பதிவேட்டில் பயிர்ச் சேதங்கள் குறித்து விவசாயிகள் பதிவிட வேண்டும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற வேண்டுமாயின், விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு இலக்கமான 1918 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.




